கபில ஹெந்தவிதாரண வை போல் ஏன் நீங்கள் செயற்படவில்லை? சிசிர மெண்டிசிடம் பொன்சேகா விசாரணை.
தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியாகவிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவினைப் போல் நீங்கள் ஏன் செயற்படவில்லை என தற்போதைய பிரதானி, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸிடம் வினவினார் பீல்ட் மார்ஸல் பொன்சேகா.
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்நிலையில் தேசிய பாதுகாப்புக்கான பிரதானி சாட்சியமளிக்கும்போதே பொன்சேகா மேற்கண்டவாறு வினவினார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக தான் ஏப்ரல் 8ம் திகதி மிகவும் இரகசியமான அறிக்கை ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கும் பின்னர் அரச புலனாய்வுத்துறை, குற்றப் புலனாய்வுத்துறை , பயங்கரவாத தடுப்பு பிரிவு, வீசேட அதிரடிப் படை ஆகிய பிரிவுகளின் பிரதானிகளுக்கு தெரிவித்திருந்தாக சிசிர மென்டிஸ் கூறினார்.
அதன்போது குறுக்கிட்ட பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக கபில ஹெந்தவித்தாரண செயற்பட்டபோது, அவர் நாட்டின் சகல புலனாய்வுப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்துச் செயற்பட்டதுடன், தகவல்கள் உரியமுறையில் பரிமாறப்படுவதை உறுதி செய்து கொள்வார். அத்துடன் நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதானிகளை அழைத்து விசாரணை செய்வார். அவ்வாறான நடவடிக்கைகளை நீங்கள் செய்வதில்லையா என் வினவினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானி, தனக்கு அவ்வாறான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், முன்னாள் பிரதானி பாதுகாப்புச் செயலருக்கு வழங்கப்பட்டிருந்த சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி அவ்வாறு செயற்பட்டு வந்தாக நழுவிக்கொண்டார்.
புலனாய்வு விடயங்களில் மிகவும் நேர்த்தியாக செயற்பட்ட கபில ஹெந்தவித்தாரண தகவல்களை திரட்டிக்கொள்வதிலும் அவற்றை நிர்வகிப்பதிலும் , தேவையானவாறு பயன்படுத்துவதிலும் மிக தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகால புலனாய்வு அனுபவம் கொண்டவர் அவர். புலிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். புலிகளின் பல்வேறு தாக்குதல்கள் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்ற எவ்வித தடயங்களோ தகவல்களோ இதுவரை வெளிவராமைக்கு பின்னால் உள்ளவரும் இவரே. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்பதவியிலிருந்து ராஜனாமா செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் அவ்வாறு பதவிவிலகிச் சென்றதன் பின்னார் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அக்கருமத்தை சிறப்புறச் செய்வதற்கு பதிலாக ஹெந்தவிதாரணவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அவற்றை ஊடகங்களுக்கு வழங்குகின்ற இழிசெயல்களை புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்றிருக்கும் அந்த அதிகாரியிடம் ஆலோசனைகளை பெற்றிருந்தால் சில சமயங்களில் உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தை தடுத்திருக்க முடியும் என்பது பரவலான கருத்தாகவுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் இன்று இலங்கையின் புலனாய்வுத் துறை என்பது, அர்த்தமற்றதாக மாறியுள்ளது. புலனாய்வுத் துறைக்கான நியமனங்கள் துறைசார் அனுபவம் மற்றும் தகுதியிலன்றி அரசியல் பின்புலங்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது. இலங்கை புலனாய்வுத் துறையின் வினைத்திறனின்மையால் சுமார் 300 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
ஒரு மணி நேரத்தில் 5 இடங்களில் இடம்பெற்றபோதும் அதை தடுத்திருக்ககூடியவர்கள் தமது கடமைகளிலிருந்து தவறி கொலைகளுக்கு உடந்தைகளாக இருந்திருக்கின்றார்கள் என்ற ரீதியில் அவர்கள் குற்றவியல் தண்டனைச் சட்த்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு அதி உச்ச தண்டனை அளிக்கப்படவேண்டியவர்கள்.
இந்நிலையில் அவ்வாறானவர்களை தொடர்பாக விசாரணை செய்வதற்கு பாராளுமன்றினால் தேர்வுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை கேலிக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment