Tuesday, May 14, 2019

ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில் எதிர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி மாறிய வியாளேந்திரன் , நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துக் கையொப்பமிட்டுள்ளபோதும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் உள்ளமையால் அதனை இப்போதைக்குச் சமர்ப்பிக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளதன் ஊடாக மஹிந்த தரப்பின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு மஹிந்த தரப்பு இரட்டை முகத்தை காண்பிக்கின்றது என்ற செய்திகள் பரவியுள்ள நிலையில், பசில் ராஜபக்சவிடமிருந்து அவ்வாறான எதிர்ப்புக்கள் எதுவும் வரவில்லை என மல்லிகைமொட்டு அறிவித்துள்ளதுடன், நாளை தமது கட்சி கூடி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிரேரணைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர் என அறிய முடிகின்றது.

இவ்விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி போன்ற கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்கப்போகின்றது என்பது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment