சாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை!
பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில், அண்மையில் நடைபெற்ற ‘சண்டை’யின் நடுவில் சிக்கி, “அஸ்ரிபா இறந்து விட்டார்” என்கிறார் அவரின் தாயார் ஹிதாயா.
சாய்ந்தமருது – பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.
“சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் அவர்களின் ஆட்டோவில் கல்முனைக்குடியிலுள்ள அஸ்ரிபாவின் மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். நாங்கள் பொலிவேரியன் வீட்டில் இருந்தோம். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்”.
“அப்போது அஸ்ரிபாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். விவரத்தைக் கூறி, இங்கு இப்போது வரவேண்டாம், நாளை வாருங்கள் என்றும் கூறினேன். ஆனால், அவர்கள் அதையும் கேளாமல் வந்து, இதற்குள் மாட்டிக் கொண்டார்கள்” என்று அஸ்ரிபாவின் தாய் ஹிதாயா கூறுகிறார்.
அஸ்ரிபாவுக்கு நான்கு சகோதரிகள். அஸ்ரிபாதான் மூத்தவர். 2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவர் அஸ்ரிபாவை திருமணம் முடித்தார்.
எங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்பதற்காகத்தான், அஸ்ரிபாவுக்கு 16 வயதிலேயே திருமணம் முடித்து வைத்தோம். மகன் ஸ்தானத்தில் ஒரு மருமகன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதுபோலவே அஸ்ரிபாவின் கணவரும் இருந்தார். எங்களை பெற்றோர் போலவே பார்த்துக் கொண்டார்” என்று அஸ்ரிபாவின் தந்தை அக்பீல் அழுகையை அடக்கிக் கொண்டு கூறினார்.
அஸ்ரிபாவின் பெற்றோரை, சாய்ந்தமருதில் கடற்கரையோரமாக அமைந்துள்ள, அவர்களின் உறவினர் வீடொன்றிலேயே பிபிசி சந்தித்துப் பேசியது.
சம்பவ தினத்தன்று நடந்த மேலதிக விடயங்களை அஸ்ரிபாவின் தாய் மீண்டும் பிபிசி உடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
“அன்று இரவு முழுவதும் அஸ்ரிபாவின் கைப்பேசிக்கு அழைத்து இடைக்கிடையே பேசிக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் எனது அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. சம்பவ தினம் அதிகாலை இரண்டரை மணியிருக்கும் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பெடுத்தவர் கூறினார். ஆனால், அஸ்ரிபாவின் நிலை என்ன என்பதை அவர் எமக்குச் சொல்லவில்லை”
அந்த சம்பவம் நடந்து மறுநாள் காலை, பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
அஸ்ரிபாவுக்கு என்ன நடந்தது என்பதில் அவரின் தாயாரும் தந்தையும் மாறுபட்ட தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். படையினரின் துப்பாக்சிக் சூட்டிலேயே தனது மகள் உயிரிழந்ததாக அஸ்ரிபாவின் தாயார் கூறுகிறார். ஆனால், சம்பவத்தை தாங்கள் நேரடியாகக் காணவில்லை என்பதால், யாரின் தாக்குதலில் தனது மகள் பலியானார் என்பதைக் கூற முடியாது என்கிறார் அஸ்ரிபாவின் தந்தை.
“திருணமாகி 41ஆவது நாளிலேயே அஸ்ரிபாவின் கணவர், தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த வருடம் நோன்பு மாதம்தான், மீண்டும் அவர் ஊர் வந்தார். அவர்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது” என்று அழுகின்றார்கள் அஸ்ரிபாவின் உறவினர்கள்.
அஸ்ரிபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அவரின் பெற்றோர் நம்மை அழைத்துச் சென்றனர்.
அஸ்ரிபாவின் வீடு பூட்டியிருந்தது. சாவி கிடைக்காததால், வீட்டுக் கதவில் தொங்கிய பூட்டை, அவரின் தந்தை உடைத்துக் கொண்டுதான் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.
அஸ்ரிபாவுக்கு அவரின் கணவர் அன்புடன் வாங்கிக் கொடுத்த பொருட்களையெல்லாம், நம்மிடம் ஒவ்வொன்றாகக் காண்பித்தவாறே அஸ்ரிபாவின் தாய் அழுகின்றார்.
“அஸ்ரிபா கிளியொன்றை வளர்த்தார். அவர் இறந்த மறுநாளே அந்தக் கிளியும் செத்துப் போய் விட்டது” என அங்கிருந்த கிளிக் கூடு ஒன்றைக் காட்டி, அஸ்ரிபாவின் தாயார் கண்ணீர் சிந்தினார்.
“அஸ்ரிபாவுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தோம். அதனால், அஸ்ரிபாவை அவரின் கணவர் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டார். இந்த வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்தாலே, அதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறி, அஸ்ரிபாவின் பாட்டி (தாயின் தாய்) சத்தமிட்டு அழுகின்றார்.
நன்றி பிபிசி தமிழ்.
0 comments :
Post a Comment