விஷேட மூன்றடுக்கு அதிரடிப்படை பாதுகாப்புடன், 4 ஆம் மாடியில் மதூஷிடம் விசாரணை ஆரம்பம்.
தனது மகனின் பிறந்த நாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலகத் தலைவனும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாக்கந்துரே மதூஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித டுபாயிலிருந்து நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் மாக்கந்துரே மதூஷ் நாடுகடத்தப்பட்டிருந்தார். விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைப் பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு யூ.எல். 226 எனும் விமானத்தின் பயணிகள் பட்டியல் கட்டுநாயக்க விமான நிலைய உளவுத் துறைக்கும் சி.ஐ.டி.க்கும் கிடைத்த நிலையில் அதில் மதூஷ் வருவது உறுதி செய்யப்பட்ட நிலையில், இராஜதந்திர தகவல்கள் ஊடாக அதனை மேலும் உறுதி செய்து மதூஷை பொறுப்பேற்க தயாராக இருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு அவரை இவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்கப்பட்ட அவர் அங்கு சில மணி நேரம் மட்டுமே தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மூன்றடுக்கு விஷேட அதிரடிப் படை பாதுகாப்புடன் நேற்று முற்பகல் வேளையில் உடனடியாக கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டு சிறப்பு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மதூஷின் கணக்கில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை செய்யும் பொறுப்பு முழுமையாக சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ், இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டின் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து தன்னை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரியிருந்தார். அதன் தீர்ப்பு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், மாகந்துரே மதுஷை நாடு கடத்துமாறு இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அந்நாட்டு அதிகாரிகளை வலியுறுத்தியிருந்தார். அதன்படி அமீரக அரசு, கொள்கை அளவில் எடுத்த தீர்மானத்தை இடையீட்டு மனுவூடாக அந் நாட்டு நீதிமன்றுக்கு அறிவித்த நிலையிலேயே மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
2015 ஆம் ஆண்டு மாகந்துரே மதூஷ் வர்ணகுலசூரிய அஜித் அரங்க எனும் பெயரிலான போலி பெயரில் தயாரிக்கப்பட்ட கடவுச் சீட்டில் டுபாய்க்கு சென்றுள்ளார். அதில் அவரது முகவரியாக இலக்கம் 241/ ஏ, ஜா எல வீதி , கம்பஹா என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மதூஷின் உண்மையாக முகவரி மாவரல பொலிஸ் பிரிவில் உள்ள மாகந்துரே எனும் ஊராகும். அங்கு தற்போது மதூஷின் மனைவி வசித்து வருகின்றார்.
மதூஷுக்கு எதிராக சுமார் 50 கொலைகளும் கொலை முயற்சி சம்பவங்கள் மற்றும் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
பொலிஸ் தலைமையக தகவல்களின் பிரகாரம், அதில் பிரதானமாக 2017.மே.9 ஆம் திகதி பிலியந்தலையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சுற்றிவலைப்பு பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் மதூஷ் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார். அச்சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள், சிறுமி ஒருவர் என இருவர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
2017.பெப்ர்வரி மாதம் 27 ஆம் திகதி களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தி இரு சிறை அதிகாரிகள், சமயன் எனும் பாதாள உலக குழு உறுப்பினர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்கள் என 7 பேரைக் கொலை செய்த சம்பவத்திலும் மதூஷ் பிரதான சூத்திரதாரியாக பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை 2018.3.27 அன்று சாந்த குமார அல்லது கொஸ்மல்லி என்பவரை கடத்தி கொன்று அவரது தலையை வேறாக வெட்டி கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் கொண்டுவந்து போட்ட சம்பவத்திலும் மதூஷே பிரதான சந்தேக நபராக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைவிட பல கொலைகள் மற்றும் கொள்ளைகள், போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் மதூஷ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
இதனைவிட 2006.ஜூன் 11 ஆம் திகதி கம்புறுபிட்டி பகுதியில் வைத்து தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டியவை கொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களாலும் மதூஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளும் உள்ளமை விஷேட அம்சமாகும்.
இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படும் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோரை பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு விசேட குழுவொன்று பொலிஸ் தலைமையகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் அரச புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் 25 அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன்ர். குறித்த குழு 24 மணித்தியாலங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவென சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான ஷானி அபேசேகர, சமிந்த தனபால, பொலிஸ் அத்தியட்சர்களான ருவன் குனசேகர, நிசாந்த டி சொய்ஸா மற்றும் ஹேமந்த ஆகியோரை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட விஷேட மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அவர்களின் மேற்பார்வையில் கீழேயே தற்போது மதூஷிடம் சிரப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.
இதனைவிட ஜனாதிபதி கொலை சதி விவகாரம் தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எப்.எம்.பஸீர்).
0 comments :
Post a Comment