Monday, April 22, 2019

மிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -

மிஸ்டர் தீவிரவாதிக்கு,

உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு?

உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா?

கஸ்தூரி கலந்த துணியில் உன் ஆன்மா சுற்றப்பட்டு அர்ஷை நோக்கி கொண்டு செல்லப்பட்டதா?

ஏழுபது கன்னியரோடு இன்பம் அனுபவிக்கிறாயா இப்பொழுது?

சுவனத்து ஜன்னலின் பூங்காற்று உன்னை இன்று வருடுகிறதா?

என் இறைவனைக் கண்டாயா?

என்ன, அவன் உன்னை வாழ்த்தினானா?

“ஆகா என் அடிமையே என்னவொரு அற்புதச் செயலைச் செய்துவிட்டாய்.நீ உறுஞ்சிய அத்தனை இரத்தத்திற்கும் இதோ உஹது மலையளவு நன்மை உனக்கு” என்று ஏதாவது எழுதித்தந்தானா?

நீ நேற்றுக் கொன்ற அவன் படைத்த அத்தனை ஆத்மாக்களுக்கும் கணக்குப் பார்த்து தலைக்கொரு தங்கத் தோட்டம் பரிசளித்தானா?

நீ நேற்று அனாதையாக்கிய அத்தனை குழந்தைகளின் கண்ணீருக்கும் தேனாறுகள் பரிசளித்தானா?

நீ விதவையாக்கிய அத்தனை பெண்களின் அழுகைகளுக்கும் பாலாறுகள் பருகச் செய்தானா?

‘இதுதானடா இஸ்லாம்.இதைத்தானாடா நான் சொன்னேன் என் செல்வமே’ என்று முத்துக் குவளையில் சஞ்சபீலை ஊற்றி உன் வாயில் பருக்கினானா?

‘ஆகா அற்புதம்.காபிர்களின் வணக்கஸ்தலத்தில் அவர்கள் பெருநாளில் வெடித்துச் சிதறிய உன் கால்களை ‘சுந்துஸ்’ மற்றும் ‘ஸ்தப்ரக்’ பட்டைக் கொண்டு சுற்றினானா?

பைத்தியக்காறா,

எவர் நீதியின்றி ஒரு உயிரைக் கொல்கிறாரோ எவர் முழு மனிதத்தையும் கொன்றவராவார் என்று சொன்ன என் இறைவன் உன்னை அங்கீகரிப்பான் என்று நினைத்தா நேற்று நீ வெடித்துச் சிதறினாய்?

இடையில் எம்பெருமானாரைச் சந்தித்தாயா?

“போர்க்களத்தில் எதிரே நிற்கும் எதிரிகளின் வணக்கஸ்தலங்களை தாக்காதீர்கள்.பெண்களைக் கொல்லாதீர்கள்.முதியவர்களைக் கொல்லாதீர்கள்.குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.மரங்களை வெட்டாதீர்கள்’ என்று சொன்ன எம்பெருமானார் நீ செய்ததைச் சரிகாண்பார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்?

வரும் வழியில் உமரைக் கண்டாயா?

‘அவர்கள் வணக்கஸ்தலங்களில் அவர்கள் இணைவைத்தாலும் அவர்களை விட்டுவிடுங்கள்’ என்று சொன்ன உமர் உன் வீரச்செயலை மெச்சுவார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்

ஸலாஹுத்தீன் அய்யூபியைச் சந்தித்தாயா?

‘போர்க்களத்தின் எட்வினின் குஷ்டரோகம் பிடித்த முகத்தைப் பார்த்துவிட்டு நாளை எனது வைத்தியரை அனுப்புகிறேன்’ என்று சொல்லி அனுப்பியும் வைத்த அய்யூபி உன்னை அங்கீகரிப்பார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்.

எது உன் நீதி?

பெருநாளைக் கொண்டாட புத்தாடை அணிந்து பள்ளிக்குச் சென்ற அந்த அப்பாவிக் அக்குழந்தையைக் கொல்வதா உன் நீதி?

செய்த இனிப்பைச் சாப்பிடுவதற்கு முன்னர் தேவாலயம் சென்றவளைக் கொல்வதா உன் நீதி?

பெருநாள் காசைச் சேர்த்துப் பந்து வாங்க நினைத்த அக்குழந்தையின் கைகளைச் சிதைப்பதா உன் நீதி?

இதை இஸ்லாம் என்றா நினைத்தாய்.இந்தக் குழப்பத்தை விளைப்பதுதான் உனக்கு சுவனத்தைத் தரும் என்றா நினைத்தாய்?இந்த இரத்தம் ஓட்டுவதுதான் இஸ்லாம் என்று நினைத்தாயா மூடனே?1440 ஆண்டுகள் வாழும் இஸ்லாம் சொன்ன வாழ்க்கை முறை இதுதான் என்று நீ நினைத்தாயா?

மரணித்த நீ உயிரோடு வாழப்போகும் எங்களின் எதிர்காலத்தை ஒரு இரவில் புரட்டிப் போட்ட பாவத்திற்கு எங்கே போய் பிராயச்சித்தம் தேடுவாய்?

இனி நான் தாடி வைத்துக் கொண்டு வீதியில் நடந்தால் என்னையும் தீவிரவாதியாகப் பார்க்கும் இந்த நரக வாழ்க்கையை எனக்குத் தந்துவிட்டு உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றா நினைத்தாய்?

முகத்தை மூடிக் கொண்டு வாழும் என் மனைவி குண்டைக் கட்டிக் கொண்டு போகிறாள் என்று யாரும் கூக்குரலிட்டால் அவள் அனுபவிக்கும் அவமானத்திற்கு உனக்கு வலக்கரத்தில் ஏடு வரும் என்றா நினைத்தாய்.

கொழும்புக்குப் படிக்கப் போகும் என் சகோதரனின் அறைக்குள் எப்போது மோப்ப நாய்களோடு பாய்ந்து வருவார்கள் என்று வாழும் நரக வாழ்க்கைக்கு உனக்கென்ன பிர்தௌவ்ஸ் கிடைக்கும் என்றா நினைத்தாய்?

ஒற்றை இரவில் எங்கள் வாழ்வியலை மாற்றிய பாவத்தை நாங்கள் முறையிட்டால் எங்கள் இறைவனிடம் என்ன சொல்வாய்?

இனி வாழும் காலமெல்லாம் பயத்தோடு வாழும் வாழ்க்கையைப் பரிசளித்த உன்னைப் பற்றி நாங்கள் அனைவரும் முறையிட்டால் என்ன செய்வாய்?

நேற்று காலை எழும்பும் போது தீவிரவாதத்திற்கு மதமும் இல்லை.இனமும் இல்லை.மொழியும் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

நேற்று தூங்கப்போகும் போது தீவிரவாதிகளுக்கு மதமும்,மொழியும்,இனமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் மதமே தீவிரவாதம்தான்.உங்கள் இனம் தீவிரவாத இனம்தான்.உங்கள் மொழி தீவிரவாத மொழிதான்.

உங்களுக்கும் இஸ்லாத்திற்கும்,உங்களுக்கும் பௌத்தத்திற்கும்,உங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும், உங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.

ஏனெனில் இவைகள் மனிதர்களின் மதங்கள்.

நீங்கள் மனிதர்களே அல்லர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com