Friday, April 19, 2019

கோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்? வெளிவருகின்றது உண்மைகள்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்கடிப்பது என்பது எதிர்தரப்பினருக்கு அல்லது இன்றைய ஆழும்கட்சினருக்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.

எனவே தேர்தலில் சவாலை எதிர்கொள்வதிலும் பார்க்க சூழ்ச்சி செய்து விழுத்துவது இலங்கை அரசியல் கலாச்சாரம். இது இன்று கோத்தாவிற்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல வரலாறு முழுவதும் இடம்பெற்று வந்துள்ளது. அந்த வகையில் அவர் தேர்தலில் நுழைவதை தடுப்பதற்கு ஏதுவாக அரசியல் யாப்பையே மாற்றி அமைத்தார்கள். இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று சட்டம் நிறைவேற்றினார்கள்.

ஆனாலும் வெளிநாட்டு பிரஜா உரிமையை ரத்து செய்துவிட்டு தேர்தலில் குதிக்க தயாராகின்றார் கோத்தபாய. என்னதான் செய்வார்கள்? தற்போது அமெரிக்க பிரஜா உரிமை ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக சட்டத்திலுள்ள சில ஓட்டைகளை தேடி அலைந்தனர் பொன்சேகா–மங்கள கோஷ்டியினர். இதில் பொன்சேகா கோத்தபாயவிற்கு எதிராக இத்தனை சிரத்தை எடுப்பதற்கு காரணம் நாட்டின் மீதோ அல்லது மக்கள் மீதோ உள்ள பற்று கிடையாது. உண்மையை உண்மையாகவே சொல்லப்போனால் கோத்தபாயவும் புத்தர் அல்ல. அதிகாரம் கைக்கு கிட்டினால் முதாலாவது அதன் துஷ்பிரயோகம் பொன்சேகாவிற்கு கஞ்சிக்கோப்பை நீட்டுவதற்கே பயன்படுத்துவார் என்பது யாவரும் அறிந்த விடயம். எனவே கோத்தபாய கைக்கு அதிகாரம் செல்வதை தடுப்பதற்கு பொன்சேகா எந்த விலையும் கொடுக்க தயங்கமாட்டார் என்பதையும் உணர்ந்து கொள்ளத்தான்வேண்டும்.

எனவேதான் ஒரு சட்டவிரோத வியாபாரியை விலைக்கு வாங்கியுள்ளனர். யார் இந்த வியாபாரி? அவர் பெயர் றோய் சமாதானம். இலங்கையில் சட்டவிரோதமாக தொலைபேசி மற்றும் சில இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டனை பெற்றவர். அவர் தற்போது தன்மீது புலிப்போர்வை போர்த்திக்கொள்ளவும் தமிழ் தேசியவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றார். ஆனால் அவர் சிங்கள அரசியல்வாதிகளின் எடுபிடியாகவே கொழும்பில் சட்டவிரோத வியாபாரம் செய்தார் என்பது பெரிய கதை. இவருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்குமிடையேயான தொடர்புகள் தொடர்பில் பக்கங்கள் எழுதவேண்டிவரும் என்பதால் தற்போதைக்கு தவிர்த்துக்கொள்வோம்.

சமாதனத்தை தனது முன்னைய எஜமானர்கள் அல்லது வியாபார நண்பர்கள் பயன்படுத்துகின்றனர். மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்ற ஒருவர் தடுத்து வைக்கப்படுகின்றபோது, அசௌகரியங்களை சந்திக்கின்றமை ஒன்றும் புதியவிடயம் கிடையாது. ஜனநாயகத்தின் எஜனமானர்கள் அல்லது மனித உரிமைகளின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற மேற்குலகில் கைதிகளின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பற்றி அவர்கள் சொல்ல நிறையேவே கேட்டிருக்கின்றோம். எந்த சிறையிலும் கைதிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுவதில்லை. அனால் சமாதானம் அவ்வாறு வரவேற்கப்படவில்லை என்றும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் நஷ்டஈடு கேட்டு அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் றோய் சமாதானம்.

அவர் இவ்வழக்கில் வென்றால், இலங்கையில் மேற்கொண்ட சட்டவிரோ வியாபாரத்தில் உழைத்ததை பார்க்கிலும் பல மடங்கு பணத்தை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது இவ்வழக்கினூடாக கோத்தபாயவின் அமெரிக்க பிரஜா உரிமை வாபஸ்பெற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கலை ஏற்படுத்தி அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடிந்தால் அதற்கான சன்மானத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம், அந்த சன்மானம் யாழ்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகம் மீண்டுமொருமுறை எரியூட்டப்படுவதாக இல்லாதிருக்கட்டும் என்று மாத்திரம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

இவ்வாறான நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த காஞ்சன விஜேசேகர :

'கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார்.

சிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார். அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

உள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

பொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment