Thursday, April 18, 2019

பிள்ளையானைப் பார்த்தேன்! சீவகன் பூபாலரட்ணம்

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் “கண்டேன் சீதையை” என்ற கணக்கில் தலைப்பு வைத்திருக்கிறார், அவரென்ன சீதையளவு உத்தமரா? இவரென்ன அனுமாரா என்ற மாதிரி பலர் நினைக்கலாம். ஆனால், அவர்களை என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.

ஆனால், பிள்ளையானைப் பார்த்ததும் அவருடன் பேசியதும் நான் அதிசயித்தேன். உண்மையில் இன்னுமொரு பெரிய தலைவரை நான் முதன் முதலில் பார்த்ததை இதனுடன் ஒப்பிட்டு எழுதத்தான் நினைத்தேன். ஆனால், நான் அப்படி எழுதியிருந்தால், நான் மேலே சொன்ன வகையறாக்கள் மேலும் மனம் நொந்துபோயிருப்பார்கள். அதனால், தவிர்க்கிறேன்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் என்னைப் பொறுத்தவரை ஒரு சிறார் போராளி. 16 வயதில் தான் இயக்கத்தில் சேர்ந்ததாக அவரே சொன்னார். அவர் ஒரு சிறார் போராளி என்பதாலும், பிள்ளையான் என்று பெயர் இருந்த காரணத்தாலுமோ என்னவோ, அவர் ஒரு பதவிக்காலம் முழுவதும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பின்னரும் கூட அவர் பற்றிய பிரமாண்ட தோற்றம் எதுவும் எனமனதில் இருந்ததில்லை.

ஆனால், மட்டக்களப்பு சிறைச்சாலையில், சில நிமிட அனுமதியில் நான் பார்த்துப் பேசிய பிள்ளையான் நிச்சயமாக முதிர்ச்சியடைந்த ஒரு அரசியல்வாதி. இன்னமும் எதுவும் தெரியாத சிறார் போராளி என்றெல்லாம் என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை.

“புலவர்” என்ற பெயரைக் கொண்ட கிழக்குப் பிராந்திய கடற்படைத்துணைத்தளபதியாக இருந்த முன்னாள் போராளி ஒருவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. ‘ஒவ்வொருவரும் எங்கெங்கோவெல்லாம், என்னென்னவோவெல்லாம் படித்திருப்பார்கள், ஆனால், என்னுடைய பல்கலைக்கழகம் இயக்கம்தான்’ என்று அவரைச் செவ்வி கண்ட போது ஒரு தடவை கூறியிருந்தார். அது சரிதானோ என்றும் பிள்ளையானைச் சந்தித்த போது எண்ணத்தோன்றியது.

இதுதான் நான் பிள்ளையானைச் சந்தித்த முதல் தடவை. என்ன நடக்க வேண்டும் என்று நான் கேட்டதற்கு ‘முதலில எங்கட மக்களை மாற்ற வேண்டும் அண்ணன்’ என்றார். பொருளாதாரத்தை மாற்றணும், அரசியலை மாற்றணும் என்று அவர் கூறியிருந்தால், அது தவறான பதிலாக இருந்திருக்காவிட்டாலும், அது ஒரு சாதாரண பதிலாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் மக்களை மாற்றணும் என்று சொன்னதும், அதற்குச் சொன்ன காரணங்களும் அவர் பற்றிய மரியாதையை அதிகரிக்கச் செய்தது.

மாகாணசபைக்கு தலைமைமேற்றுச் செயற்பட்ட ஒரு பதவிக்காலம் பிள்ளையானை நன்கு புடம் போட்டிருக்கிறது. மாகாணத்தின், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரல் நுனியில் தகவல் வைத்துப் பேசுகிறார். எதனையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசினாலும், சிக்கலுக்கு அல்லது இலகுவில் பதற்றத்தை தூண்டக்கூடிய விடயங்களில், ‘தீவிரவாதியான’ பிள்ளையானிடம் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவர் நிதானமாகப் பேசுகிறார்.

அவரது அரசியல் கூட்டணி பற்றி நான் கேள்வியெழுப்ப, ‘யாருடனும் கூட்டணி போடலாம் அண்ணன், ஆனால், நடக்கிறதை நாம தீர்மானிக்கக்கூடியதாக இருக்கணும், அவர்கள் போடும் தாளத்துக்கு நாம் ஆடமுடியாது. நமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டத்தை நாமதான் போடணும், அடுத்தவர்கள் போடும் திட்டத்தை நாம் கையில் எடுத்து முழம் போடக்கூடாது’ என்கிறார்.

தான் நிர்மாணிக்கத் தொடங்கிய மட்டக்களப்பு வாசிகசாலைக்கான கட்டிடம் பூர்த்தியாகாதமை குறித்து அவருக்கு ஏக்கம் இருக்கிறது. ‘உண்மையில் அடுத்த தடவையும் நான்தான் பதவிக்கு வருவேன் என்று நினைத்துவிட்டேன். அதனால் அது தவறி விட்டது’ என்கிறார். ஆனால், அவரது ஆட்சியில் கட்டப்பட்டு அரைவாசிக்கு மேல் நிர்மாணிக்கப்பட்ட அந்த வாசிகசாலை, இன்று அதன் பின்னரும் ஒரு பதவிக்காலம் முடிந்து பூர்த்தியாகாமல் இருப்பது கவலைக்குரியது. அடுத்த ஆட்சியில் இருந்தவர்கள், அந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களின் பொறுப்பு அது. ஆனால், இந்தக் கணம்வரை அது திறக்கப்படவில்லை.

இதேபோல படுவான்கரையில் உன்னிச்சைக்குளத்துக்கு ஒத்ததாக, பாவக்கொடிச்சேனை மற்றும் தாந்தாமலை ஆகியவற்றுக்கு அருகாக தான் நிர்மாணிக்கவிருந்த ஒரு “கனவுக் குளம்” பற்றியும் மிகவும் ஆர்வமாக விபரித்தார். அதனை நடத்தி முடித்திருந்தால் எல்லாம் சிறப்பாக நடந்திருக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறவில்லை. அதனை எப்படியாவது செய்தாகணும் என்றுதான் கூறினார்.

சிறைக்கு பிள்ளையான் வந்த பிறகு சிறையும் அபிவிருத்தி அடைந்திருப்பதாக அங்கு சிலர் கூறக்கேட்டேன். மலசல கூடம் முதல் சிறைக்கு வெள்ளை பூசியது வரை பல அபிவிருத்திகளை அங்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ‘பிள்ளையான் வந்ததால்தான் சிறைக்கும் அபிவிருத்தி’ என்று ஒருவர் கூறியதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு போகமுடியவில்லை.

சிறை வாழ்க்கை பிள்ளையானுக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்திருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ‘இருக்கும் ஆட்சியை கவிழு’ என்று அவர் பேசவில்லை. இருப்பவர்களை வைத்து காரியத்தை நடத்து என்று ஒருவருக்கு எனக்கு முன்னாலேயே ஆலோசனை கூறினார்.

அவரது வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு. அது தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், அதனைப் பற்றி நான் இங்கு பேசுவது உசிதமல்ல. ஆனால், தன்னை தொடர்ச்சியாக 1000 நாட்களுக்கும் அதிகமாக தடுத்து வைத்திருப்பதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. பொதுவாக மக்கள் பலரும் இதே கருத்தை கூறுகிறார்கள்.

பிள்ளையான் ஒரு பெரும் கொள்கையைக் கொண்ட சித்தாந்தவாதியல்ல. அவருக்கு பெரிய கொள்கைகளை, சித்தாந்தந்தத்தை வகுத்தவர்களையும் தெரியவில்லை என்ற விமர்சனம் பொதுவானது. ஆனால், வடக்குக் கிழக்கில் இதுவரை இருந்த முதலமைச்சர்களில் தமிழ் மக்களை நோக்கி துரித அபிவிருத்தியை கொண்டு சென்றவர் அவர்தான் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். பெரும் அறிஞர்கள் என்று நாம் நினைத்தவர்கள் எல்லாம் எம்மை ஏமாற்ற, பிள்ளையான் தெரு அமைத்திருக்கிறார், விளக்கு போட்டிருக்கிறார், கட்டிடம் கட்டியிருக்கிறார். மாகாண சபை உள்ளூராட்சி சபை செய்யக்கூடியது அதுதான். மாகாணசபைக்கு அதிகாரம் கிடையாது என்று சொல்லி புலம்பியே காலம் கழித்தவர்களைப் போல அவர் இருக்கவில்லை.

அவர் பதவியில் இருந்த காலத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவரது கையில் ஆயுதம் இருந்த காலத்தில் அவரது நடவடிக்கைகள் குறித்த விமர்சனம் இன்னமும் தொடர்கிறது. ஆரம்பத்தில் அவர்களில் இருந்து மக்கள் விலகிப்போனதற்கு அதுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தீவிரவாதப் போக்கில் செயற்பட்டதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களில் மாற்றம் தெரிகிறது. மக்களும் நெருங்கி வருவது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தெரிந்தது.

தமிழீழம் வேண்டுமா? இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? இவை கிடைக்கும் என்றால், அதற்கு முயற்சிக்க வேண்டும் என்றால் பிள்ளையானை தேடவேண்டாம். அதனைச் செய்து தருவோம் என்று உறுதி கூறும் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பலாமா என்பதை இன்னுமொரு நாள் ஆழமாக ஆராய்வோம். ஆனால், அபிவிருத்திதான் உங்கள் பகுதிக்கு தேவையெண்டால்; இதுவரை காலத்தில் கிழக்கு மாகாணத்தில், வடக்கு மாகாணத்தில் இதை மேம்படச் செய்ய தன்னால்தான் முடியும் என்று பிள்ளையான் நிரூபித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில்கூட எந்த முதலமைச்சரும் இருந்ததில்லை. ஆகவே அபிவிருத்திதான் வேண்டுமென்றால் பிள்ளையானைத்தான் நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கும்.

பிள்ளையானும் தனது வழக்கில் இருந்து விடுதலையாகி வரவேண்டும். தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அதற்கு நீண்ட உழைப்பும் தேவை. பொறுமை தேவை. நல்ல திட்டம் தேவை. இதற்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதுவும் வெற்றியளித்தாக வேண்டும்.

இப்படி எழுதியதற்காக நான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்துவிட்டேன் என்றோ, அரங்கம் அவர்களுக்கு ஆதரவு என்றோ அவசரமாக முடிவு செய்துவிட வேண்டாம். அப்படி திட்டம் போட்டு பிரச்சாரம் செய்யவும் ஆட்கள் இப்போதே தயாராகி இருப்பார்கள். அப்படித்தான் முடிவு செய்து என்னை திட்டினாலும், பரவாயில்லை. என் பணி சரியென்று நினைப்பதை எழுதுவது. அது மாத்திரந்தான். பிள்ளையான் மீண்டும் ஆட்சிக்கு வந்து தவறு செய்தாலும் நிச்சயமாக அதையும் எழுதுவேன்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். அனைத்தும் ஊடகனுக்கே!

அரங்கம் பத்திரிகையில் இருந்து.

No comments:

Post a Comment