Tuesday, April 9, 2019

தோத்தாவுக்கு அமெரிக்காவில் அழைப்பாணை என்பது அப்பழுக்கற்ற பொய்.. பேச்சாளர் மிலிந்த

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த வழக்குகள் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை கையளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

அச்செய்தியில் கலிபோர்னியாவிலுள்ள Traders Joe’s என்ற வணிகத்தொடரின் கார் தரிப்பிடத்தில் வைத்து குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி ஒருவர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிடம் அழைப்பாணையை வழங்கியதாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தகவலானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவ்வாறு எவ்வித அழைப்பாணைகளும் கையளிக்கப்படவில்லை என்றும் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் அவரது பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா கலிபோர்னிய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டதாக கூறும் தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு இரண்டாவது வழக்கினை கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.

தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில், அஹிம்சா விக்ரமதுங்க சிவில் பாதிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேநேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைத்து தாக்கப்பட்டதாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்துள்ள, தமிழர் அச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதியான மஹிந்த ராஜபக்சவை குறிப்பிடாது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை குற்றவாளி என்பது எவ்வாறு என்ற கேள்வி இங்கு எழுந்து நிற்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோட்டபாய போட்டியிடுவதிலிருந்து அவரை தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் குறிந்த நாடகத்தில் இறுதியாக வழக்காளிகள் பெரும் சிக்கல்களை மேற்கொள்ளவேண்டி வரலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் பிரஜா உரிமையை நீக்கி கொள்வதற்கு சிவில் வழக்கு ஒன்று தடையாக இருக்காது என அமெரிக்க குடியுரிமைகள் சட்ட திட்டங்களை மேற்கோள்காட்டும் சட்ட வல்லுனர்கள், அவ்வாறு அது தற்காலிக தாமதத்தையேனும் கொடுத்து தேர்தலில் பங்குபற்றுவதை தடுக்குமாயின் குறித்த நபர்கள் இருவரும் பெரும் நஷ்டத்தை செலுத்த வேண்டி வரும் என அவர்கள் கட்டியம் கூறுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com