Friday, April 5, 2019

சிறிலங்கன் எயார்லைன் தனியாருக்கு விற்பனை. புலியின் கைக்கு செல்கின்றதாம்! சாடுகின்றது தொழிற்சங்கம்.

இலங்கையின் தேசிய விமானச் சேவையான சிறிலங்கன் ஏயார்லைன் கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. இதற்கான காரணம் வெளிப்படையானது. அரசியல்வாதிகள் நிறுவனத்தின் வழங்களை சுரண்டுவதும், நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளுமே இந்நிலைக்கு காரணமாகும்.

இந்நிலையில் இலங்கை அரசு அந்நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதனை புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமான லைக்கா நிறுவனமே கொள்வனவு செய்யவுள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தேசிய சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜனக விஜேபதிரன குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அந்த சங்கம் நேற்று ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

'விடுதலைப் புலிகளின் நிதி ஒதுக்கீடுகளுடன் செயற்படும் நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் இரண்டு அதிக இலாபகரமான துணை நிறுவனங்கள் இரண்டை அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தகைய ஒப்பந்தத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பில் லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது கண்காணித்து வருவதாகவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் சேவையாற்றி, அனுபவமுள்ள அதிகாரிகள் சிலரை அவர்கள் இணைத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய விமான சேவையின் நட்டம் என்ற முடிச்சை அவிழ்க்கச் சென்று, பாரிய பாதிப்பு ஏற்பட்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை அடகு வைக்கும் அபாயத்தை ஜனாதிபதி உணர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கேட்டரிங் நிறுவனம் வருடாந்தம் மில்லியன் கணக்கில் இலாபமீட்டுகின்றது எனவும் இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான தேவை என்ன எனவும் ஜனக்க விஜேபத்திரண கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, நேரடியாக மூடவுள்ள விமான நிறுவனத்தை, மறைமுகமாக மூட சிலர் முற்படுவதாகவும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு இது குறித்து எச்சரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹசந்த யசரத்ன குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததைப் போன்று, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இந்த அரசாங்கத்தினால் விற்பனை செய்ய முடியாது எனவும் ஹசந்த யசரத்ன கூறினார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com