Monday, April 1, 2019

நமது சமூகத்தில் துரோகத்தின் தேவை. நடேசன்

விபீசணன் இராமனோடு சேர்ந்திராமல் இராவணனோடு, சகோதரன் என்ற ஒற்றுமையோடு போர் செய்து அழிந்திருந்தால் இலங்கைக்கும் மக்களுக்கும் என்ன நடத்திருக்கும் ..? என நாம் சிந்தித்திருக்கிறோமா ? இராமனோ அல்லது சேர்ந்து வந்த குரங்குகளோ இலங்கையை எரியூட்டிவிட்டுச் சென்றிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

ஒற்றுமையாக இருப்பது என்பது மிகவும் ஆதிகால மக்களின் கோட்பாடு . மிருகங்கள் மற்றும் பகைவர்களிடமிருந்து தங்களையும் குடும்பத்தையும் அல்லது இனக்குழுவையும் காப்பதற்கான ஒரு பாதுகாப்பு கவசம். இந்தக் கவசம் கிரேக்கத்தில் 2500 வருடங்கள் முன்பாக நகர அரசுகள் உருவாகியபோது உடைபடுகிறது . மக்கள் ஜனநாயகம் என்ற குடையில் திரளும்போது அங்கு பல தரப்பட்ட கருத்துகள், கேள்விகள் பல எழுப்பப்படுகிறது. விவாதங்கள் நடக்கின்றன. மக்கள் பொதுவெளியில் ஒன்று கூடி விவாதிக்கிறார்கள். சோக்கிரட்டிஸ் தொடக்கம் பல அறிஞர்கள் கேள்விகளைக் கேட்க மக்களைத் தூண்டுகிறார்கள். இதன் வெளிப்பாடே நாம் தற்போது அனுபவிக்கும் ஜனநாயகம்.

சமூக மாற்றத்தில் விவசாயி தொழிலாளியை விட ஏராளமான தொழில்சார் பிரிவுகள் உருவாகின்றன. ஒரு மருத்துவரது தேவை மற்றைய மக்களிடம் வேறுபடுகிறது. ஆண்களது தேவைகள் பெண்கள் ,குழந்தைளிடமிருந்து மாறுபடுகிறது. நமது வடமாகாணத்தின் தேவையும் கிழக்கு மாகாணத்தின் தேவையும் வித்தியாசமானது. அதேபோல் வட மாகாணத்தில் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்தின் தேவைகள் மாறுபடுகிறது. மலையத் தமிழர் முற்றிலும் வித்தியாசமானவர்கள் என அவர்களது தலைவர் தொண்டமான் உணர்ந்ததால் இன்று அவர்கள் புதிய சமூகமாக இலங்கையில் வாழ்கிறார்கள்.

உலகத்தில் முட்டாள்கள் மட்டுமே வேறுபாடுகளை உணராது வித்தியாசமான தேவைகளைப் புரியாது ஒற்றுமையை வலியுறுத்துவார்கள். செம்மறியையும் வெள்ளாட்டையும் ஒன்றாக நினைப்பார்கள்.

பெரும்பான்மையினரது கருத்தை ஏற்காதபோது மற்றவர்களை துரோகிகளாகப் பார்ப்பது 21 ஆம் நூற்றாண்டில் இன்னமும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களில் எத்தனை உயிர்கள் இந்த துரோகி பட்டம் கொடுத்து அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..? இந்த உயிர்கள் மேலுலகம் சென்றனர். இதைச் செய்தவர்கள் இன்றுவரை யாரிடமாவது மன்னிப்புக் கேட்டார்களா? ஆனால் இப்படி துரோகிப் பட்டம் சுமந்து கொலை செய்யப்பட்டவர்களது உறவுகள் இன்னமும் சிலுவையைச் சுமந்தபடி வாழகிறார்கள்.

அறமற்று மாற்றான் மனைவியைக் கவர்ந்தது தவறு எனச் சொல்லியும் கேளாத இராவணனுக்கு விபீசணன் செய்த துரோகம் அக்காலத்து இலங்கை மக்களைக் காப்பாற்றியது.

இலங்கையில் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியான கருணா என்ற முரளீதரனைப் போருக்கு பின்பு சந்தித்து பேசியபோது எனக்கு அவர் மீது மதிப்பு மரியாதை ஏற்பட்டது . நோர்வேயால் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை மறுத்ததால் புலிகளிடையே பிரிவு ஏற்பட்டது. அதை விடப் பல காரணங்கள் இருக்கலாம். இவையெல்லாம் எனக்கு பிரச்சினையில்லை. அத்துடன் கருணாவின் பிரிவுக்கு முன்பான கிழக்கு மாகாண விடுதலைப்புலிகளின் செயல்களைப் பலர் விமர்சிப்பார்கள். ஏற்றுக் கொள்கிறேன் . அதே வேளையில் மாற்றங்களை வரவேற்கிறேன். காரணம் கிழக்கு மகாணத்தில் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவைத் தவிர்த்த ஒரு முக்கிய கதாநாயகனாகக் கருணாவைப் பார்க்கிறேன் . பிற்காலத்தில் புனர்வாழ்வு துணை அமைச்சராக இருந்தபோது விடுதலைப்புலிகளாக இருந்து சரணடைந்தவர்களை நீதிமன்றத்தினூடாக செல்லாது புனர்வாழ்வு முகாம்ளுடாக வெளிக்கொணர்ந்ததிலும் கருணாவின் பங்கு உள்ளது. இலங்கையின் நீதித் துறையூடாகச் செல்வது புதை குழிகளை கடப்பதுபோன்ற செயல். அங்கு சென்றபின் ஜனாதிபதி நினைத்தாலும் கைகொடுத்து வெளியே இழுக்க முடியாது . தற்போதைய அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் இந்த புதைகுழியில் சிக்கியவர்கள். அரசாங்கத்துடன் கள்ள உறவு வைத்திருக்கும் தற்போதைய தமிழ்தேசியக்கூட்டமைப்பு இவர்களை வெளிக்கொணர முடியாது இருப்பதற்கு இதுவே காரணம் .

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் சமூக உரிமைக்கான போராட்டத்தை, தமிழருக்கும் சிங்களவருக்கும் அல்லது தமிழருக்கும் இலங்கை அரசிற்கான போராக்கினார்கள். இங்கே 15 வீதமான தமிழர்களை 70 வீதமான சிங்களவருடனும் மிகுதி இஸ்லாமியர்களுடனும் பொருதவைப்பதே விடுதலைப்புலிகளின் நோக்கம். இந்த மாதிரியான இனப்போர் அநீதியானது. எக்காலத்திலும் வெல்லமுடியாதது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் லக்ஷ்மன் கதிர்காமர் , நீலன் திருச்செல்வம் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள்.

விடுதலைப்புலிகளைத் திருத்த முடியாது என்பதால் போரை நிறுத்த முடியாது. அரசுடன் அவர்கள் நின்றதால் இலங்கை இராணுவம் மற்றும் அரசிற்கு இந்தப்போர் தமிழருக்கு எதிரான போர் என்று சொல்லமுடியாது .

இரண்டாம் உலகப்போர் , ஜப்பானிய அரசிற்கும் அல்லது கிட்லருக்கும் நாசிகளுக்கும் எதிரான போரென அமெரிக்கர் சொல்லவில்லை. ஜப்பான், ஜேர்மனுக்கு எதிரான போராகவே நடத்தி குண்டுகளை வீசி சாதாரண மக்களை அழித்தார்கள் .

தமிழ்ப்பிரதேசங்களில் பொதுமக்களை அழிக்கவில்லையா ? எனக்கேட்கலாம் . உண்மை! பொதுமக்கள் அழிந்தார்கள்! ஆனால், அதற்கான பல தவறுகள் விடுதலைப் புலிகளிடம் இருந்தன . கிழக்கு மாகாணத்தில் பெரிதாகப் போர் நடந்தபோது கிழக்கு போராளிகள், மக்களை இராணுவத்திடம் சரணடைவதை தடுக்கவில்லை. ஆனால் வடமாகாணத்தில் நான்கு இலட்சம் பேரை போர்க்களத்தில் தங்களது பாதுகாப்பணையயாக வைத்திருந்தார்கள். பொது மக்கள் பெண்கள் சிறுவர்களிடம் ஆயுதம் கொடுத்து அவர்களையும் போராளியாக்கினர். இதேபோல் வெளிநாட்டுத்தமிழர்கள் 90 வீதமானவர்கள் விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழர்கள்- வெளிநாட்டுத்தமிழர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களல்ல என அரசுடன் தொடர்பு கொண்டு பேசினோம் . விபீசணர்களாகவோ ஒத்தோடிகளாகவோ பெருமிதத்துடன் மாறினோம். இதன் பின்பு இலங்கை அரசு எங்களது சில கோரிக்கைகளை செவி சாய்த்தது

சமூகத்தில் 90 வீதமானவர்கள் முட்டாள்தனமாக அழியும்போது, சிலர் துரோகிகளாக மாறுவது பெருமைக்குரிய விடயமாகக் கருதுகிறேன் . அவர்கள் அப்படி சமூக அக்கறையில் துரோகியாவது அந்த சமூகத்திற்கான சேவை என்று சங்கே முழங்கு.

No comments:

Post a Comment