நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளை அழைத்து மஹிந்தர் மந்திராலோசனை.
பயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராயவும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆராயவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளையும் மற்றும் புலனாய்வு அதிகாரிகளையும் ஒன்றிணைத்த குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதுள்ள நிலைமைகள் குறித்தும் பாதுகாப்பு பலவீனத்தன்மை மற்றும் எவ்வாறான நகர்வுகளை கையாண்டு பாதுகாப்பை பலப்படுத்துவது என்ற காரணிகளை ஆராயும் வகையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் முன்னாள் பாதுகாப்பு உயர் பிரதானிகள் குழுவுடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் இந்த சந்திப்பை நடத்தியிருந்தார்.
முன்னாள் பாதுகாப்பு தளபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களை பயன்படுத்தி தற்போதுள்ள நிலைமைகளை ஆராய இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் நிலைமைகளை உடனடியாக அறியத்தர எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
இதில் பாதுகாப்பு பிரதானி ஜகத் ஜெயசூரிய, முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக, முன்னாள் விமானப்படை தளபதி ரோஹான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, அட்மிரல் ஜகத் கொலம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சந்திர பெர்னாண்டோ, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வகிஷ்த்த, முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உள்ளடங்கிய வகையிலே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் புலனாய்வுத்துறை உயர் அதிகார்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment