Wednesday, April 3, 2019

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக அரசியல்வாதிகள் தீவிரப்படுத்துகின்றார்கள்.

தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் ரிபாஸ் குற்றச்சாட்டு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல்வாதிகளின் நடத்தைகளும், நடவடிக்கைகளும் பிரச்சினையை மேலும் கூர்மைப்படுத்தி இரு இனங்களுக்கும் இடையிலான விரிசலை தீவிரப்படுத்துவனாக உள்ளனவே ஒழிய சுமூக தீர்வை பெற்று தருவனவாக இல்லை என்று தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்பு மற்றும் சட்ட விவகாரங்களுக்கான மேலதிக செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எல். ரிபாஸ் தெரிவித்தார்.

இவரின் மருதமுனை இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (03) புதன்கிழமை சந்தித்து கல்முனையை மையப்படுத்திய அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு பேசியவை வருமாறு

தேசிய அரசியலில் கல்முனையை மையப்படுத்திய பல்வேறு பிரச்சினைகள் பேசுபொருட்களாக மாறி இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், அரசாங்கத்தின் பங்காளிகளும் இவற்றை ஆர்வத்துடன் செவிமடுத்து உரிய தீர்வுகளை பெற்று தருகின்றார்கள் இல்லை. மாறாக இவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகள் இப்பிரச்சினைகளை இன்னமும் கூர்மைப்படுத்துவதுடன் இனவாதம், பிரதேசவாதம் ஆகியவற்றை தூண்டி விட்டு பிரிவினைகளை நிரந்தரமாக்கி வைத்திருக்கின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகம், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை ஆகிய விடயங்கள் இவ்வகையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. இவை சார்ந்த பிரச்சினைகளை பிச்சைக்காரனின் புண்ணை போல நீடிக்க வைத்து வங்குரோத்து அரசியல் செய்கின்றார்கள்.

சாய்ந்தமருது பிரச்சினையின் பின்னணியில் அண்மையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கார் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டன. அதே போல முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டு உள்ளன. அத்துடன் மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பிணையில் வெளியில் வந்துள்ளனர். ஆனால் இப்பிரச்சினையை தீர்த்து தர வேண்டியவர்கள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் இருந்து கொண்டும் தீராத தலை வலியாக இதை தொடர்ந்தும் வைத்திருக்கின்றனர். எமது தலைவர் அதாவுல்லா அமைச்சராக பதவி வகித்தபோது கல்முனையில் நான்கு சபைகளை உருவாக்குகின்ற முயற்சியில் ஆக்கபூர்வமாக செயற்பட்டு ஏற்று கொள்ள கூடிய தீர்வை முன்வைத்து இருந்தார். சாய்ந்தமருதுக்கான சபை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏனைய மூன்று சபைகளையும் பொறுத்த வரை எல்லை பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண்பதற்கு தமிழ் பேசும் இரு சமூகங்களையும் சேர்ந்த அரசியல், சமூக, பொதுநல செயற்பாட்டாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல்வாதிகளின் நடத்தைகளும், நடவடிக்கைகளும் இனங்களுக்கு இடையில் மேலும் விரிசல்களை விரிவுபடுத்தி தீவிரம் அடைய வைக்கின்றன. இரு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமும், அவசரமுமான நகர்வாக அமைய வேண்டி இருக்கின்றது.

(எஸ்.அஷ்ரப்கான்).

No comments:

Post a Comment