Monday, April 1, 2019

பகிடிவதையின் கொடுமை, மேலுமொரு மாணவன் கடிதமெழுதி வைத்துவிட்டு தற்கொலை.

மொரட்டு பல்கலைக்கழகத்தின் ஹோமாகம - தியகம தொழில்நுட்ப நிறுவனத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குருநாகல் - கும்புக்கெட்டே - சடுவாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஷனில்க தில்ஷான் விஜேசிங்க என்ற மாணவனே தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் முதலாவது பிள்ளையான இவர், தனது மரணத்திற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தியகம தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவன், பகிடிவதைக்கு உள்ளானதன் பின்னர் ஏற்பட்ட உளவியல் தாக்கத்திற்கு குருநாகல்லில் உள்ள மனநல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார் என கும்புக்கெட்டே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை, குருநாகல் மருத்துவமனையில் சட்ட மருத்துவ அதிகாரியினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com