Thursday, April 25, 2019

மொனிக் இலங்கையை நேசித்தார் அதனால் அவர் அமைதியாக இளைப்பாற இம்மண்ணையே தேர்ந்து கொண்டார்.

தனது கைத்தொலைபேசியில் ஒருவர் சேமித்து வைக்கக்கூடிய முக்கியமான போட்டோவாக இது இருக்காது. ஆனால் இந்த அற்புதமான ஆன்மாவின் அழகிய முகத்தினை எனது கைத்தொலைபேசியில் சேமித்து வைக்க வேண்டி இருந்தது.. இப்போது அதற்காக நான் பெருமையடைவதுடன் மனமொடிந்தும் போகின்றேன்.

நேற்றைய குண்டுத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக, சில மருத்துவ மாணவர்கள் , ஏதோ ஓர் வகையில் உதவமுடியுமா என்று பார்ப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சேவைப்பிரிவுக்கு விரைந்தோம். ஒரு மணித்தியாலமாக Resuscitation அறையின் ( செயற்கை சுவாசம் கொடுத்து, இதயத்தை இயங்க பண்ணி சுயநினைவு வரப்பண்ணும் அறை) அமளி துமளிகளின் பின், அவ்வறையில் அதிக மருத்துவர்கள் தாதிகள் கடமையில் இருந்தபடியால், மருத்துவ மாணவர்கள் வெளியே சென்று காயங்களுடன் தப்பியவர்களை அமைதிப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.

சத்திர சிகிச்சை அறைகளுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, நாம் ஏற்கனவே அவதானித்த, வெளி நோயாளர் பிரிவின் விபத்துப்பிரிவில் அங்கும் இங்கும் ஏக்கத்துடன் அலைந்து கொண்டிருந்த , நெதர்லாந்தை சேர்ந்த ஓர் தந்தையும் அவரின் இரு மகன்களும், சில உள்ளூர் வாசிகளுடன் casualty ward க்கு முன் யாரோ மிக நெருக்கமான ஒருவரை தேடிக்கொண்டிருப்பவர்களைப்போல் காணப்பட்டார்கள். நாம் அவர்களிடம் சென்று அவர்களுக்கு உதவ முயன்றோம். அன்று காலையில் சினமன் கிரான்ட் ஹோட்டலில் தமது மூத்த சகோதரனுடன் காலையுணவு அருந்திக்கொண்டிருந்த போது காயப்பட்ட தமது தாயாரை தேடிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். தாம் மூவரும் அவர்களின் அன்றைய பாங்கொக் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தபடியால் அவர்களுடன் அந்நேரம் இருக்கவில்லை என்றும், அவர்களது மூத்த சகோதரனிடமிருந்து அவர்களுக்கு கிடைத்த ஒரேயொரு தகவல், அவர்களின் தாயார் தலையில் காயமடைந்ததாகவும், ஹோட்டல் போக்குவரத்து சேவை மூலம் தாயார் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது மட்டுமே. அவர்களால் , தலையிலும் நெஞ்சிலும் கைகளிலும் காயப்பட்ட மூத்த சகோதரனை விட்டு அவர்களால் தாயாரை தேடமுடியாத்தால், நாம் அப்பெண்மணியை தேட முடிவெடுத்தோம். ஆதலால் அவர்களின் தாயாரின் போட்டோ ஒன்றினை கேட்டோம். அவர்களின் கமெராவில் இறுதியாக எடுத்த போட்டோவினை பெரிதுபடுத்தி எனது கைத்தொலைபேசியில் படம் பிடித்துக்கொண்டேன்.

தலையில் காயம் என்றபடியால் நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு சென்றோம். அங்கு இல்லை. இரண்டு neurosurgical சத்திரசிகிச்சை அறைகள், இதுவரை அப்பெண்மணி சத்திர சிகிச்சை செய்யப்படவில்லை. ஐந்து neurosurgical அவசரசிகிச்சை பிரிவுகள், எங்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை. விபத்து சேவை அவசரசிகிச்சை பிரிவில் நான்கு படுகாயப்பட்ட உள்ளூர் வாசிகள் கவனமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். விபத்து சேவை பெண்கள் ward வெறுமையாக இருந்தது. Triage பிரிவினரால் (காயங்களின் தன்மைகளுக்கேற்ப சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும் பிரிவு) பாரிய எண்ணிக்கையினாலான காயப்பட்டவர்கள் மத்தியில் அவரின் முகத்தை நினைவுறுத்த முடியவில்லை. மீண்டும் Resuscitation அறைக்கு விரைந்தோம். அங்கு மூன்று வேறு காயப்பட்டவர்களின் உயிர்காக்க போராடிக்கொண்டிருந்தார்கள். வெளி நோயாளர் பிரிவிலும் தேடினோம். எம் எல்லா முயற்சிகளும் வீணாகிப்போகின. தாதிகளிடம் விசாரித்தபோது,பல காயப்பட்டவர்கள் பொது சத்திர சிகிச்சை விபத்துப்பிரிவுக்கு மாற்றப்பட்டபடியால் அங்கு தேடச்சொன்னார்கள். அங்கு ஐந்து உள்ளூர் வாசிகள் மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஓர் தாதி அடுத்த பிரிவில் ஓர் வெளிநாட்டவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நாம் அங்கு சென்ற போது, அத்தந்தையும் இரு மகன்களும் தொய்ந்து போன முகங்களுடன் வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வெளிநாட்டவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இனி பார்க்கவேண்டிய ஒரே இடங்கள் பிணவறைகள் மட்டும்தான். ஏற்கனவே வைத்தியசாலை பிணவறையில் உறவுகளை தேடிய சில உள்ளூர்வாசிகள் அங்கு குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் யாருமில்லை என்று சொன்னார்கள்.
ஆதலால் தேடவேண்டிய இறுதி இடம் பிரான்ஸிஸ் றோட்டிலுள்ள பொலிஸ் பிணவறை மட்டுமே என்று தீர்மானித்து பிற்பகல் 1 மணியளவில் அங்கு விரைந்தோம். அவ்விடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்களால் நிறைந்திருந்தது. அழுகைகளுடனும் விம்மல்களுடனும் மக்கள் காணப்பட்டனர். உத்தியோகத்தர்கள் காணாமல் போனவர்களின் தரவுகளை உறவினரிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தார்கள்.அவர்களும் எம்மைப்போலவே உறவுகளை தேடிக்களைத்து சோர்ந்து போயிருந்தார்கள்.

இறந்த வெளிநாட்டவரைப்பற்றி விசாரித்தபோது, இதுவரை 27 வெளிநாட்டவரின் உடல்கள் அங்கிருப்பதாகவும், அவர்களின் புகைப்படங்கள் பிற்பகல் 3 மணியளவில் காட்சிப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டது. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் முயற்சிகளினால், வெளிநாட்டவர் அதற்கு முன்பாகவே தம் உறவுகளை அடையாளம் காண அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ஆம், எதனைக்காணக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தோமோ அதனை இறுதியாக கண்டோம். ஏனைய ஒன்றுமறியா பயணிகளின் மத்தியில் அந்த அழகிய தேவதை அழகாக படுத்திருந்தார் - இல்லை படுக்கவைக்கப்ப்பட்டிருந்தார்- இரத்த வெள்ளத்தில்-
பாரிய மூளையில் ஏற்பட்ட காயம் அப்பெண்ணின் இறப்புக்கு காரணம். மகன்கள் இருவரும் அழத்தொடங்கி மயங்கி விழுந்தார்கள். ஆனால் தந்தை திரு. லூயிஸ் அலன் , சிறிது நேர விசும்பலுடன் கூடிய கண்ணீரின் பின் அங்கிருந்த தன் மனைவியை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகூறி தன் மகன்களை அணைத்துக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

கனவான்களே நண்பர்களே ❤️

அலன் குடும்பம், நேபாளத்தில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்தில் இறந்த தமது மகன் ஜஸ்ரின் அலனின் நினைவாக 100 மில்லியன் ரூபாவினை இரத்தினபுரி மாகாண வைத்தியசாலையில் குழந்தைநலபிரிவு கட்டுவதற்காக வழங்கியிருந்தார்கள். கடந்த 20ம் திகதி ( குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள்) புதிதாக கட்டப்பட்ட அப்பிரிவுக்கு சென்றிருந்த போது திருமதி. மொனிக் அலன் மேலும் இரண்டு தளங்களை அக்குழ்நதைநல பிரிவில் கட்டித்தருவதற்கு உதவுவதாக வாக்களித்திருந்தார். இரத்தினபுரியில் இருந்து திரும்பும்வழியில்தான் அன்று காலையில் தனது உயிரை இழப்பதற்காக சினமன் கிரான்ட் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார்.

அலன் குடும்பத்துக்கு ஏராளமான வியாபார நண்பர்கள் இலங்கையில் இருந்தாலும் அந்த உறவுக்கு மேல் மொனிக் அலன் இலங்கையை மிகவும் நேசித்தார். அதனாலேயே அடிக்கடி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள். மொனிக் ஒல்லாந்து நாட்டினராகவும் அவரின் கணவர் ஓர் அமெரிக்கராகவும் இருந்தபோதிலும் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஓர் குழந்தைநல பிரிவினை அமைக்கும் குடும்பத்தின் தீர்மானம், அப்பெண்மணி எம் நாட்டின் மீது கொண்ட அன்பினாலேயே எடுக்கப் பட்டது. அதிகமான இலங்கையின் குழந்தைகள் தரமான மருத்துவ வசதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரின் ஆசை, அவரின் இறுதி ஆசையாகவே போய்விட்டது.

வைத்தியசாலையில் அவரினைப்பற்றி அவரின் நண்பர்களிடமிருந்து அறிந்து கொண்டதைவிட, என் இதயத்தை தொட்டது அவரின் இறுதி கிரியைகளின் போது அவரின் கணவர் காட்டிய வெளிப்பாடு. எல்லா கிரியைகளும் முடிவடைந்து பங்குகொண்டவர்கள் எல்லோரும் அவர்களை ஆறுதல்படுத்தி விடைபெறும்போது, அவர் தன் பிள்ளைகளிடம் ஆழ்ந்த மூச்சினை எடுத்து நன்றியுணர்வுடன், அவர்களின் தாயார் இலங்கை மக்களின்மேல் கொண்ட அன்புடன் அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாற அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார் .

அதன்பின் "மொனிக் இலங்கையை நேசித்தார் அதனால் அவர் அமைதியாக இளைப்பாற இம்மண்ணையே தேர்ந்து கொண்டார். நாம் அனைவரும் இவ்விடுமுறையில் வியட்னாம் செல்ல விரும்பியிருந்தோம். அவரே எங்களை இங்கு அழைத்து வந்தார். நாம் மூவர் மட்டும் எம் நாட்களை இங்கு சுருக்கி கொண்டு பாங்கொக் புறப்பட இருந்தோம். அவரும் ஜேசனும் இங்கிருக்க முடிவெடுத்திருந்தார்கள். நண்பர்களே, உங்கள்மேல் கொண்ட அதீத அன்பினால் அனேகமாக அவர் இதனை உணர்ந்திருக்க வேண்டும். இந்த மண்ணே அவரின் நிரந்தரமான வீடு எனவும் நினைத்திருக்க வேண்டும். அவர் உண்மையிலேயே இந்நாட்டினை நேசித்திருந்தார். உங்கள் அன்புக்கு நன்றி." என்று கூறி விடைபெற்றார்.

ஒவ்வொரு வருடமும் அவர்களின் தாயாரின் கல்லறைக்கு அவர்கள் பிரார்த்திக்க வரப்போகிறார்கள். நாம் இன்னும் அறிவிலிகளாக இருந்து கொண்டு அவர்களையும் அவர்களின் தாயாரோடு சொர்க்கத்தில் விரைவில் சேரப்பண்ணப்போகிறோமா???

திருமதி. மொனிக் இறக்கும்வரை அவர்கள் 100 மில்லியன் ரூபாய் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தது எவருக்குமே தெரியாது. ஏனெனில் தமது உதவி பகிரங்கப்படுத்தப்படகூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். (அவர்களின் கமராவில் இருந்த குடும்ப போட்டோவில் இருந்து பெருப்பிக்கப்பட்ட இம்முகம் என் தொலைபேசியில் என்றும் அவர்களின் நினைவாக. தூரதிர்ஷ்டவசமாக இதுதான் அவர்களின் இறுதி குடும்ப படமாகவும் போய்விட்டது)

இந்த குடும்பம் தங்கள் குடும்பத்தின் தூண் ஒன்றை இழந்து இந்த நாட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறும்போது, தங்களை அதிமேதாவிகளாக, கொடைவள்ளல்களாக தங்கள் பகட்டுத்தனத்தை பகிரங்கப்படுத்திக்கொண்டிருக்கும், எங்கள் வரிப்பணத்தையே எமக்கு நஷ்ட ஈடாக வழங்கி எகத்தாளமிட்டுக்கொண்டிருக்கும், இப்பேரழிவினையே தமக்கு அனுகூலமாக்கப்போகும் எம்மவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்களையா நாம் மீண்டும் எம் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்போகின்றோம்?

சிந்திப்போம்!!!! இதிலிருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம்.

அன்பு மட்டும் உங்களை பாதுகாத்திருந்தால், நீங்கள் எப்போதும் உயிரோடு இருந்திருப்பீர்கள்.

திருமதி. மொனிக் அலன் ❤️அமைதியடைக.

திரு. லூயிஸ் அலன், ஜேசன், ரிமோத்தி, ஜாஸ்பர் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏💐🙏

Original post : Tharushihan Muhunthan
Translated by : Benildus Johnson


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com