ஐ.தே.க விசேட சந்திப்புக்கு தயாராகின்றது. மீண்டும் பொதுவேட்பாளரை தேடுகின்றதா?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தலைமையில் விரைவில் உயர்மட்டக் கூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் குறித்த சந்திப்பு இடம்பெறலாம் என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, சரத் பொன்சேகா ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்துகொள்வார்கள் எனத் தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்கின்ற போதிலும், சபாநாயகராகப் பதவியேற்ற பின்னர் அக்கட்சி சார்ந்த கூட்டங்களில் பங்கேற்பதை கரு ஜயசூரிய தவிர்த்து வந்தார்.
எனினும், குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதால் அவர் கட்டாயம் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள பங்காளிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.
இக்கூட்டணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கும். இது குறித்தான அறிவிப்பு மே முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
எனவே, இவ்விடயம் குறித்தும், மே தினக் கூட்டம் சம்பந்தமாகவும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்பதற்காகவே இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பையும் மே தினத்தன்று ஐ.தே.க. விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவேதான், முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் முடிவடைந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சியுடன் விசேட மத்திய செயற்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment