Monday, April 1, 2019

பல பில்லியன்கள் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருட்கள் அழித்தொழிக்கப்பட்டது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கைது செய்யப்படப்படுகின்ற போதைப்பொருள் மீண்டும் சந்தைக்கு வருதாக மக்களால் குற்றம்சுமந்தப்பட்டு வருகின்ற நிலையில் பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 765 கிலோ கிராமிற்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் இன்று பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய களனிய மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அதனை ஜனாதிபதி நேரடியாக சென்று மேற்பார்வை செய்திருந்தார் என்பது சிறப்பம்சமாகும்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளை பார்வையிட ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி 926 கிலோ கிராம் கொகெயின் போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட போதைப் பொருட்களே அவ்வாறு அழிக்கப்பட்டது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பகிரங்கமாக அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு பின்னர் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேலும் தீவிரப்படுத்துவதுடன் போதைப்பொருட்களை இலங்கையில் இருந்து முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து செல்வதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com