5 தசப்பங்களுக்கு முன்னர் மருதானை புகையிரத நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட உடுவில் யுவதியின் கதை கேளீர்.
இலங்கையிலே இன்று பல்வேறு வகையான கடத்தல்கள் தொடர்பாக பேசப்படுகின்றது. சேகுவரா கலவரத்தை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொட்டு அண்மையில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் அரசியல் இருப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் நிலுவையில் நிற்கும் கடத்தல் வரை நாம் இடைவிடாது பேசிக்கொண்டிருக்கின்றறோம்.
இந்நிலையில் இற்றைக்கு சுமார் 5 தசாப்தங்களுக்கு முன்னர் தான் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து உடுவில் பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரை கடத்திச் சென்ற கதையை கூறுகின்றார் லக்ஷ்மன் பெரேரா.
சிங்களமொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு மொழிபெயர்ப்பு கீழே.
நாம் இன்று சமாதானம் ஒற்றுமை தொடர்பில் பேசுகின்றோம். நாங்கள் இந்த நாட்டிலே 50 வருடங்களுக்கு மேலாக வாழுகின்றோம். எனது மனைவி ஒரு தமிழர். அவர் யாழ்பாணத்தில் உடுவில் பிரதேசத்தை சேர்ந்தவர். நான் பதுளைப் பிரதேசத்தை சேர்ந்த சிறந்ததோர் பௌத்த சிங்கள குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் எங்கள் இருவரிடையேயும் உருவான நட்பானது காதலாகமாறி நாம் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டோம்.
இச்சந்தர்ப்பத்தில் எங்களுக்கு இரு பகுதியினரும் இல்லாது போனார்கள்.
என்னுடைய அக்கா என்னை பார்த்து „அடேய் உனக்கு சிங்களப் பெண்கள் கிடைக்காததாலா தமிழிச்சி ஒருத்தியை கட்டினாய்" என்று கேட்டார். ( எனது இருதயத்திற்கு எவ்வாறிருந்தது என நெஞ்சில் கைவைக்கின்றார். )
அதேநேரம் எனது மனைவியின் அண்ணர் ஒருவர் அவரை அடித்து ஒரிடத்தில் மறைத்து பூட்டி வைத்தார். ஆனால் அவருடைய அம்மா „அந்த சிங்கள இளைஞன் உன்னை கனித்துக்கொள்வானா" என்ற ஒரே ஒரு வினாவை மாத்திரம் கேட்டிருந்தார். அதற்கு அவர் „ஆம்" என்ற பதிலை அளித்ததுதான் தாமதம், அம்மா யாழ்தேவியில் ஏறி கொழும்பு வருவதற்கு அவரின் கையில் பணத்தை கொடுத்தார். அங்கே அயலவர்கள் குழப்பி விட்டார்கள், அத்துடன் இங்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அவர் வந்து இறங்கும்போது பிடித்துக்கொள்வதற்கு உறவினர்கள் நிரம்பி விட்டார்கள்.
அவ்வேளையில் மருதானை ரயில் நிலையத்திற்கு சென்ற நான் அவரை அந்த நிலையத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு ஒழித்தோடிச்சென்று நுகேகொடைக்கு அப்பால் உள்ள பிரதேசமொன்றில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தினோம்.
பின்னர் இருதரப்பினரும் எம்முடன் இணைந்து கொண்டார்கள். அவர்கள் இப்போது என்னை மிகவும் நேசிக்கின்றார்கள். முன்னர் இருந்ததிலும் பார்க்க இப்போது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்.
ஆனாலும் இனங்களிடையே ஏற்பட்டுள்ள குரோதம் மற்றும் கசப்பு தொடர்பாக அவர் இவ்வாறு விவரிக்கின்றார்.
நான் யாழ்பாணம் செல்லுகின்றபோது எங்கள் குடும்பத்தை சேர்ந்த பிள்ளை ஒன்று எனது மடியில் வந்து என்றும் இருக்கும். ஒரு முறைபோயிருந்தபோது, கண்ணீர் மல்க ஓடிவரும் குழந்தை காலடிகளை மெதுவாக எடுத்துவைத்து மிகவும் அவதானமாக என்னருகில் வந்து நின்றது. அவ்வாறு வந்த குழந்தை என்னிடம் கேட்டது „பாட்டா! நீங்கள் சிங்களவரா' என எனது இதயம் பிழந்தது. அந்தக் குழந்தையின் அன்பு எனக்கு தேவைப்பட்டது. நான் ஆம் சிங்களவன் என்று சொன்னால் அது கிடைக்காது என்பதை அறிந்து கொண்டு இல்லை மகனே நான் தமிழன் என்று பொய் சொன்னேன். அப்போது அந்தக் குழந்தை என்னை கட்டியணைந்து நீங்கள் தமிழா என்று முத்தமிட்டது.
எனவே இது எங்கிருந்து வந்தது வீட்டில் பேசப்பட்ட விடயம் அக்குழந்தையின் காதுகளில் விழுந்துள்ளது. இது கசப்பானது. இந்த கசப்புக்கு வைத்தியம் செய்யப்படவேண்டும்.
இந்த நாட்டிலே அவன் சிங்களவன்
இவன் முஸ்லிம்
அவன் தமிழன் என்கின்ற கசப்புக்கு மருந்தளிக்கப்படவேண்டும்.
ஆகவே இவற்றை செய்யக்கூடியது சகல சமூதாயங்களையும் சேர்ந்த பிரசங்கிகளாலும், மத தலைவர்களாலும் மாத்திரமே. குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். இனம் மதங்களாக பிரிவதால் நாம் அடையப்போவது எதுவும் இல்லை என்ற விடத்தை அவர்களது அடிமனதில் பதியவைக்கவேண்டும்.
நாங்கள் கல்வி கற்கும் காலத்தில் எங்கள் அணியின் தலைவராக சுந்தரலிங்கம் இருந்தான். அவனுக்கு நாங்கள் எல்லோரும் பயம். ஆனால் அவன் எங்கள் எல்லோர் மீதும் அன்பு செலுத்தினால். எங்களுக்கு அப்போது அவன் தமிழன் என்று விளங்கவில்லை.
அந்த விடயம் இன்று இல்லை. இனவாதம் எவ்வாறாவது ஒழிந்து புகுந்து கொள்கின்றது. அது எதற்காக ஒரு சிலரின் சுயலாபங்களுக்காகவேயன்றி நாட்டுக்காகவோ சமூதாயத்திற்காகவோ அல்ல.
எனவே இவ்விடயத்தில் சமயத்தலைவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் சிறார்களில் மனங்களில் இனபேதம், மதபேதம் பதியாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
இவ்வியடம் மேலிடத்திலிருந்து வரவேண்டும். கீழே இருக்கின்ற மனிதர்களை இவ்விடத்தில் எவ்வித குறையும் கூறுவதற்கில்லை.
இந்நாட்டிலிருக்கின்ற இனவாத பேயை விரட்டி அடிக்க கூடியவர்கள் சமயத்தலைவர்களே என லக்ஷ்மன் பெரேரா நம்புகின்றார். ஆனால் அந்த பேயை ஆட்டுபவர்களே சமயத்தலைவர்களாக இருக்கின்றபோது அது நடைபெறுமா என்பது இலங்கைநெட்டின் கேள்வியாகும்.
ஆகையால் இலங்கையில் இனவாத பேயை விரட்டியடிக்க மக்களே அணி திரளவேண்டும் என்பதும், மக்களை அணிதிரட்ட இன்று இலகுவான சாதனமாக காணப்படும் சமூகவலைத்தலங்களை பயன்படுத்த முடியும் என்றும் இலங்கைநெட் நம்புகின்றது.
இனவாத பேயை விரட்டவேண்டும் என்று நீங்களும் விரும்பினால் பகிருங்கள் இப்பதிவை.
0 comments :
Post a Comment