Friday, April 5, 2019

த.தே.கூ வின் பூரண ஆதரவுடன் ஒப்பேறினார் ரணில் விக்கிரமசிங்க. 45 வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

மஹிந்த அணியும், ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையிலிருந்து வெளியேறி இருந்தார்கள்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மார்ச் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 12ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது.

இன்று மாலை வரவு – செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும், அதிருப்தி நிலையிலுள்ள ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களையும் வளைத்து ரணில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க மஹிந்த அணியினர் வகுத்த வியூகம் இறுதியில் பிசுபிசுத்துப் போனது. ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

1 comment:

  1. Hi there! I just wanted to ask if you ever have any trouble with hackers?
    My last blog (wordpress) was hacked and I ended up losing many months
    of hard work due to no backup. Do you have any solutions to protect against hackers?

    ReplyDelete