சஹ்ரான் கொல்லப்பட்டமை, இன்னும் உறுதி செய்யப்படவில்லை - அவனை 3 வருடங்களாக தேடுறார்களாம்!
ஈஸ்டர் ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியென நம்பப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் கொல்லப்பட்டு விட்டாரா? இல்லையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவன் உயிருடன் இருந்தால் அவனைக் கைது செய்வதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவனைக் கைது செய்யும்வரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டு விட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உட்பட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளரை கொழும்பில் அவரது செயலகத்தில் சந்தித்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவன் சஹ்ரானை நாம் கடந்த மூன்று வருடங்களாகத் தேடுகிறோம். அவன் மீது எமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருந்து வந்தது. அவன் மிகவும் புத்திசாலி. பேச்சினால் கவரக்கூடியவன்.
அவரின் கீழ் இயங்குபவர்கள் படித்தவர்கள். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களில் இரு இளைஞர்கள் மாஸ்டர் டிக்ரி பட்டம் பெற்றவர்கள். மற்றொருவர் சட்டத்தரணி இவ்வாறு படித்தவர்கள் மேலும் இருக்க முடியும்.
காத்தான்குடியில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கை காரணமாக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர். இவருக்கு பிரயாண தடை உள்ளது. இவர் ஊருக்கு வெளியே நடமாடுவதாக அறியக் கிடைத்துள்ளது. இவரைக் கைது செயவதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்து வெளியிடுகையில்;
சஹ்ரான் மௌலவி தொடர்பில் நான் ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியிருக்கிறேன் என்றார்.
முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் இவ் விவகாரத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி வேண்டிக் கொண்டார்.
குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பலியானவர்களுக்கு பொதுவான இடமொன்றில் அனுதாபக் கூட்டமொன்று நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டாலும் பாதுகாப்பு காரணங்களைக் கொண்டு அது நிராகரிக்கப்பட்டது. பள்ளிவாசல்களில் அனுதாபக் கூட்டங்களை நடத்தும்படி தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., மேமன் சங்கம், மலாயர் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment