Friday, April 5, 2019

விக்கிக்கு உச்ச நீதிமன்று கொடுத்தது செருப்படி. நொதேர்ன் பவருக்கும் 20 லட்சம் செலுத்த உத்தரவு.

சுன்னாகத்தில் இயங்கிய நொதேர்ன் பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்தினால், நிலத்தில் கொட்டப்பட்ட எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டது. இதனால் சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பல பகுதிகளிலும் குடிநீர் கிணறுகளில் எண்ணெய் கலப்பு ஏற்பட்டது.

குறித்த நிறுவனத்திற்கான அனுமதி விக்கினேஸ்வரனால் முறைமையான ஒழுங்குகள் பின்பற்றப்படாமல் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவி வந்த நிலையில் குறித்த நிறுவனத்தினால் மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விக்கினேஸ்வரன் வெள்ளை அடித்து வந்தார்.

இந்நிலையில் இந்த மாசை ஏற்படுத்திய, நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தலைவர் கலாநிதி ரவீந்திர காரியவசம், அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டினால், நீர் மாசு ஏற்பட்டுள்ளது என்றும் இது குடிநீருக்காக கிணறுகளை நம்பியிருக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதியரசர்கள் பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜெயவர்த்தன, தெஹிதெனிய ஆகியோர், சுற்றாடல் மாசை ஏற்படுத்திய நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத வகையில்- 20 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளனர்.

இத்தீர்ப்பு தொடர்பாக இன்று தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய வட மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் தவராசா,
நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக் கொணரப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் ஒயில் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதி நிலத்தடி நீரில் ஒயில் மாசு கலந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அந்த அனல் மின்நிலைய நிறுவனமான நொதேன் பவர் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடடனர்.

இதன்போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் போராட்டத்தை முடக்க தாம் ஆய்வு செய்வதாக கூறி அதற்கு பெருமளவான நிதியையும் செலவழித்தனர்.

அதன் பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசுக்கள் எவையுமே இல்லை என அறிக்கையையும் வெளியிடடார்.

அவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கை பொய்யானது அதிலும் ஊழல் நடந்துள்ளது என நான் மாகாணசபையில் பல இடங்களிலும் கூறியிருந்தேன்.ஆனாலும் அவர்கள் நான் சொல்வதற்கு மறுப்பு கூறி வந்தனர்.

மேலும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய தூதுவர் வடக்கு மாகாண முன்னாள் முதல்வரிடம் சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அங்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என சர்வசாதாரணமாக கூறியிருந்தார். அதனையும் நான் ஆதாரத்துடன் மாகாண சபையில் கூறியிருந்தேன்.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் எடுக்காது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இந்த இருவரினதும் பித்தலாட்டங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளியில் வந்துள்ளது. இவர்கள் மூடி மறைத்த விடயம் நீதித்துறை ஊடாக வெளிவந்துள்ளது.என்றார்.

இதேவேளை அனல்மின் நிலையத்தினால் ஏற்பட்ட நீர் மாசு பாதிப்புக்கு 20 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு நொதேன் பவர் நிறுவனம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com