ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் நியமனம் - திங்கள் முதல் விசாரணைகள் ஆரம்பம்
முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சாட்சிப் பதிவுகளுக்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்ட வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழலை மோசடிகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, சட்டமா அதிபரால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேரை விசாரணைகளுக்காக நியமிக்குமாறும் பொலிஸ்மா அதிபரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு போதிய அதிகாரிகள் இன்மையால் மேலதிக பொலீசாரின் தேவைப்பாடு நிலவுகின்றது. இந்தநிலையில், ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளரினால் இழைக்கப்பட்ட முறைகேடு தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆணைக்குழுவில் 1,142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 48 முறைபாடுகள் பொலிஸ் விசேட பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாக பயன்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...............................
0 comments :
Post a Comment