Monday, March 25, 2019

தனக்கு மாத்திரமல்ல தனது சகாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டுமாம். சுமந்திரன் ஐஜிபி க்கு கடிதம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கு புலம்பெயர் தமிழர்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அந்த இலக்கை பாதாள உலக குழுவினரை வைத்து அடைய முனைவதாகவும் வார இறுதி சிங்கள , ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அச்செய்திகளை தொடர்ந்து உசார் அடைந்துள்ள சுமந்திரன் தனக்கும் தனது சகாக்களுக்கும் உயிர் ஆபத்து உள்ளமை மேற்படி பத்திரிகைச் செய்திகள் ஊடாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனக்கும் சகாக்களுக்கும் உடனடியாக மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டியுள்ளார்.

சுமந்திரனை புலம்பெயர் புலிகளின் தூண்டுதலின் பெயரில் கொலை செய்ய முயன்ற சில முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தது.

அவர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது :
“எனதும் மற்றைய இருவரினதும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முயற்சியும் அச்சுறுத்தலும்” என்று தலைப்பிட்டு, இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு சுமந்திரன் எம்.பி. நேற்று அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“இன்றைய (24ஆம் திகதி) ‘த சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையிலும், நேற்றைய (23ஆம் திகதி) ‘மவரட்ட’ பத்திரிகையிலும் வெளியான செய்திகள் தொடர்பாக இக் கடிதத்தை வரைகிறேன். அச்செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.

அவற்றின்படி, இந்த மாதத்தின் முற்பகுதியில் என்னைக் கொல்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அது குறித்துப் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு கடந்த வாரம் தபால் மூலம் கிடைத்த ஒரு கடிதத்தில் இந்த மாத முற்பகுதியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நானும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் பங்குபற்றியபோது இருவரும் இலக்கு வைக்கப்பட்டோம் என்றும், மேயர் இன்னொரு நிகழ்வில் இலக்கு வைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

உடனடியாகவே மேயர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளமையோடு, பொலிஸ்பாதுகாப்பு வழங்கும்படியும் கோரியிருந்தார். ஆனால், அது வழங்கப்படவில்லை.

இந்த விடயங்கள் குறித்து பொலிஸ் புலன் விசாரணை நடத்தியுள்ளதா என்பதையும், நடத்தியிருக்குமாயின் இது குறித்து எனக்கும், மேயர் ஆனோல்ட்டுக்கும், சட்டத்தரணி சயந்தனுக்கு பொலிஸார் நிலைமையைத் தெளிவுபடுத்துவார்களா என்பதையும், அவர்கள் இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பதையும் தங்களிடம் அறிய விரும்புகின்றோம்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com