பிரிந்த வடக்கில் தமிழருக்கு அதிகார பரவலாக்கம் வழங்கப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவே இல்லை - கிழக்கு தேச விடுதலை இயக்கம்
கிழக்கு தேசத்துடன் இணைக்கப்படாத வடக்கில் தமிழர்களுக்கு அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை என்று கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார்.
இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் இன்று (18) திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
இலங்கை ஒற்றையாட்சி நாடாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் கிழக்கு தேசத்தை வடக்கோடு இணைக்காமல் வடக்குக்கு அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கிழக்கு மக்களின் சுய நிர்ண உரிமை உதாசீனப்படுத்தப்பட்டு, வடக்கோடு கிழக்கு தேசம் இணைக்கப்படுவதில் கிழக்கு தேச விடுதலை இயக்கம் முரண்படுகிறது.
முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்பது வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம்களினதும் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்கின்ற பொறிமுறைகளையும், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நலன், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த கூடிய வழிமுறைகளையும் அடையாளப்படுத்த கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு, நிதி, நிலம் போன்றவற்றின் மீதான பூரண அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட, சிற்றலகுகளின் பேரலகு ஒன்றை பெற்று கொள்வதற்கான முன்மொழிவையே கிழக்கு தேச விடுதலை இயக்கம் பரிந்துரைக்கின்றது.
கிழக்கு தேசத்தின் தலைநகரமாக கல்முனை உள்ளது. கல்முனையில் உள்ள பிரதேசங்களை ஒன்றிணைத்து கல்முனை நகர சபை 1987 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின் பாரபட்சங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றுக்கு உட்படுவதாக இணைப்புக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரம் கல்முனையின் சன தொகை விகிதத்தில் மாற்றம் ஏற்படாமல், எல்லைகள் மாற்றப்படாமல்தான் எல்லோருக்குமான நீதி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரேயொரு வழி 1987 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படுவதாகும். அதன் மூலம் கல்முனை மக்களின் அச்சத்தை தீர்க்க கூடிய விதத்திலும், சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களை சேர்ந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற கூடிய வகையிலும் தீர்வு கிடைக்க பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிட்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதன் மூலம் சுமூக தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிழக்கு தேச விடுதலை இயக்கம் கோருகின்றது. இது தொடர்பாக அவருக்கு விரிவாக கடிதம் எழுதி உள்ளது.
(எஸ்.அஷ்ரப்கான்).
0 comments :
Post a Comment