வெளிநாட்டு வீட்டுப் பணிகளின் போது பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கு பலமானதொரு அமைப்பாக முன்வருமாறு சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையாக இருப்பது எந்த கட்சி, எந்த நபர் என்பதன்றி நாட்டை நேசிக்கின்ற நாட்டைப் பற்றிய உணர்வு உள்ளவர்களேயாகும் என்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு வீட்டுப் பணிகளின் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டின் பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கான பலமான அமைப்பாக அனைத்து பெண்களும் முன்வர வேண்டும்.
வெளிநாட்டு பணிப் பெண்களாக உள்ள எமது தாய்மார்கள், சகோதரிகள் முகம்கொடுத்திருக்கும் கஷ்டங்கள் மற்றும் சோகமான நிகழ்வுகள் பற்றி மகளிர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற, அதற்காக பெரும் நிதியை ஈட்டுகின்ற எந்தவொரு அமைப்பும் கவனம் செலுத்தாது இருப்பது தற்போது கவலையளிப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த விடயத்தில் நாட்டை நேசிக்கும் மக்கள் நேய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்புக்கு பாரிய பொறுப்பை நிறைவேற்ற முடியுமென்று குறிப்பிட்டார்.
இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் மகளிர் தினம் வெறுமனே கொண்டாட்டத்துடன் மட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய தினமாக இந்த தினத்தை மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
'போதைப்பொருளற்ற தேசம் – மகிழ்ச்சி நிறைந்த வீடு' என்ற கருப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வு பெரும் எண்ணிக்கையான பெண்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
விசேட திறமைகளை வெளிப்படுத்திய பெண்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மகளிர் பொலிஸ் பரிசோதகர் நிலுகா பெரேரா மற்றும் வானியல் துறையில் திறமைகளை வெளிப்படுத்திய தில்ருக்ஷி சந்தரேகா குமாரசிங்க உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, ஷியானி விஜேவிக்ரம, ஆரியவத்தி கலபத்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியின் தலைவி பிரியங்கனி அபேவீர, செயலாளர் சந்திரிகா த சொய்சா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பெருந்திரளானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment