Monday, March 18, 2019

இலங்கை தூதுக்குழு இன்று பங்கேற்கும் ஐ நா மாநாடு - எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் தூதுக்குழு இன்று பங்கேற்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான தூதுக்குழு இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வுள்ளது. குறித்த குழுவில் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம,வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களோடு ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீஸ், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜயசூரிய மற்றும் ஜெனிவாவிற்கான இலங்கைக் குழுவின் அதிகாரிகள் சிலரும் அமர்வில் கலந்துக் கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நடைபெற்றுவரும் ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கத்திற்கு நான்கு யோசனைகளை முன்வைத்து ஜெனீவாவில் இலங்கை செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் தொடர்ந்தும் இணை அனுசரணை வழங்கக் கூடாது என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி வெளியிட்ட 30/60 அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுளார்.

அத்துடன், இலங்கையில் ஹைப்ரிட் நீதிமன்றம் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நீதிமன்றம் வெளிநாடுகள் நீதிபதிகள்,மற்றும் விசாரணை அதிகாரிகளின் பங்களிப்புடன் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்டத்தையும், 2018 இலக்கம் ஐந்து மற்றும் 24 ஆம் சட்டத்தையும் ரத்துச் செய்து, அதற்காக இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய சட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜெனீவாவில் இருந்து அவ்வாறான கண்காணிப்பு இடம்பெறுமாக இருந்தால், இலங்கையில் தேர்தல் மூலம் எதர்கான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2015 ஆண்டில் நடைபெற்ற யுத்தத்தில் பெரும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி 2012 ஆம் ஆண்டு முதல் மனித உரிமை பேரவையினால் இலங்கை தொடர்பில் பல பிரரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வசே நீதிபதிகள் உள்ளடக்கிய உள்ளக விசாரணை பொறிமுறை மூலம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் 2019 மார்ச் மாதத்துடன் அது நிறைவடைகின்றது. இந்த நிலையில் பிரத்தானியா தலைமையில் ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் மற்றுமொரு புதிய பிரேரணை பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யும் அறிக்கை, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்பிக்கப்பட்ட நிலையில் கடந்த எட்டாம் திகதி அது பகிரங்கப்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் இலங்கையும் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தில் உள்ளடங்கிய விடயங்கள், நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாட்டிற்கான இணைப்பு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டமை,காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தேசிய நல்லிணக்க செயலகம் ஆகிய நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் வௌியாகியுள்ள அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறைந்தளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment