Wednesday, March 13, 2019

இலங்கை சார்பாக, வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழு ஜெனீவா பயணம்

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் பங்கெடுப்பதற்காக, வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவொன்று ஜெனீவாவிற்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின்பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்து, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

40 ஆவது ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

சர்வதேச சமூகத்திடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் நகர்வுகள் குறித்த அறிக்கை, எதிர்வரும் 20 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment