Friday, March 1, 2019

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, வடக்கின் பங்களிப்பு அவசியம் - ரிஷாட் பதியுதீன்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வடக்கு மாகாணம் 4 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள்ளேயே பல சவால்களுக்கு முகங்கொடுத்து வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

10 இலட்சம் மக்கள் வாழ்கின்ற வடக்கு மாகாணம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு 4 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இலங்கையில் அரங்கேறிய யுத்தத்தால், பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து, குறுகிய காலத்திற்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

யுத்தத்தினால் வடக்கு மாகாணம் மிக மோசமான அழிவுகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.

நமது இளைஞர், யுவதிகள் படித்து விட்டு தொழிலின்றி அவதியுறுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் திறமை உள்ளவர்களும் ஆற்றல் படைத்தவர்களும் இருக்கின்றனர்.

வளங்களும், மனித வலுவும் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த மாவட்டத்தின் பொருளாதார வளத்தை சிறப்பாக பெருக்க வேண்டும்.

வெறுமனே உற்பத்தியாளர்களாக மட்டும் நாம் இருக்காமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற பங்களிப்பை நல்கும் ஏற்றுமதியாளர்களாக நாம் மாற வேண்டும்.

இந்த நன்நோக்கத்திலேயே, வன்னியிலும் இந்த ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தபடுகின்றது என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment