Tuesday, March 12, 2019

நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு, அரசாங்கத்தின் தவறான கொள்கையே காரணம் - அனுர பிரியதர்ஷன யாப்பா

தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் ஸ்திரமற்ற கொள்கையே பிரதான காரணம் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தின் மூலம் பெறப்பட்ட கடனால் தான், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.

எனினும் குறித்த கருத்து உண்மைக்கு புறம்பானதாகும். தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, இந்த நாடு 2 ஆயிரத்து 222 பில்லியன் ரூபாய் கடனாளியாக இருந்தது.

மஹந்த ராஜபக்ச, 2009ஆம் ஆண்டில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து, பல்வேறு அபிவிருத்திகளையும் மேற்கொண்டு, 2014ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை இந்த அரசாங்கத்திடம் பொறுப்பளித்தார். அப்போது, இலங்கை 7 ஆயிரம் பில்லியன் ரூபாய் கடனாளியாக இருந்தது.

அதாவது, இந்த தொகை வெறுமனே 5 ஆயிரம் பில்லியன் ரூபாயால் தான் அதிகரித்திருந்தது. ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை வருடங்களில் 12 ஆயிரம் பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தவருடம் மீண்டும் 2 அரை பில்லியன் ரூபாய் கடனை பெற்றுக் கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்தது.

இது நாட்டின் எதிர்க்காலத்துக்கே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். அத்துடன் மக்கள் மீதான வரிச்சுமையையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனால், இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

No comments:

Post a Comment