Tuesday, March 12, 2019

நடைபெறவுள்ள தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் - ஹக்கீம்

வட, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால், சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் மேற்படி தெரிவித்தார். இது தேர்தல் வருடமாகும். இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்காவது நாம் முகம்கொடுக்க தயாராகவேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தல் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டதாக அமையப்போகின்றது. இதன்போது மீண்டும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். இதனை மக்களாகிய நீங்கள் செயற்படுத்த வேண்டும். முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் தனித் தனியே செயற்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும், முஸ்லீம் சமூகம் தோற்கக்கூடாது என்ற ஒருமித்த நிலையே எல்லோருடைய அவா ஆகும்.

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். இதன்போது தமிழ் மக்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டால் இன்னும் ஒருபடி மேலே செல்லலாம். இதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். ஆனால் நாட்டிலோ இப்போது சில்லறைப் பிரச்சினைகள் பல தலைதூக்கத் தொடங்கியுள்ளன. அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் ஆவேசப்பட்டு பேசுவதினால் இரு சமூகங்களும் பிரிந்துவிடக்கூடாது.

ஆகவே பிரச்சினைகள் என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அததைவிடுத்து தனிப்பட்ட முறையில் யாரும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணமுடியாது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com