Friday, March 15, 2019

இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கிய ஐ.நா.வுக்கான முன்னாள் பிரதிநிதி

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென, ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, ஐ நா மாநாட்டில் இலங்கையின் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது மேற்படி தெரிவித்தார்.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 70ற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனபோதிலும் இஸ்ரேல் அரசாங்கம் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட எந்த பிரேரணை தொடர்பிலும் குழம்பிக் கொள்ளவில்லை. ஆகவே இலங்கை தொடர்பில் ஐ நாவில் முன்வைக்கப்படும் எந்த ஒரு பிரேரணை தொடர்பிலும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று, ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த 2015 ஆண்டு காலப்பகுதியில் ஐ நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்டு வந்த கலாநிதி பாலித கொஹன அப்பதவியில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment