Saturday, March 30, 2019

தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்ததும் அமைச்சரவை மறுசீரமைப்பு! தேசிய அரசமைக்கும் யோசனை ‘அவுட்’

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளில் மாற்றம் இடம்பெறாவிட்டால்கூட, விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. ஒரு சில அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் (அரச நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும் தேசிய அரசமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தால்கூட அமைச்சுப் பதவி வழங்கமாட்டார் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எனவே, ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசமைத்தால்கூட, ஐ.தே.க. பக்கமுள்ள சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தேசிய அரசமைக்கும் யோசனையை ஐ.தே.க. கைவிட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.தே.க. பக்கமுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரும், சு.க. உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

“தேசிய அரசு அமைக்கப்படாது. எனினும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஐ.தே.கவால் முன்மொழியப்படும் பெயர்ப்பட்டியலை ஏற்கவேண்டும்” என்று இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இதன்படி பியசேன கமகே, விஜித் விஜதமுனி சொய்சா, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. இந்திக்க பண்டார, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட மேலும் சிலருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கையளிக்கப்படவுள்ளது.

இதற்காக தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பதவிகளை வகித்திருப்பவர்களிடமிருந்து விடயதானங்கள் கழற்றப்பட்டு, அவை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீளப்பெறும் வகையிலேயே ரிஷாத் பதியுதீனுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com