கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஹக்கீமுக்கு அமைச்சர் பதவியை விட்டு கொடுத்தவர்தான் ஹசன் அலி.
கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை ரவூப் ஹக்கீமுக்கு விட்டு கொடுத்த பெருந்தகைதான் ஹசன் அலி ஆவார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரசார செயலாளர் ஐ. எம். ஹாரிப் தெரிவித்தார்.
மு. காவில் இருந்து பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி ஆகியோர் வெளியேற நேர்ந்தது தொடர்பாக இன்று (28) வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ஹாரிப் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் ஊடக அறிக்கை வருமாறு:
ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாததால்தான் மு. காவை விட்டு வெளியேறியதாக திட்டமிட்ட வகையில் அப்பட்டமான பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் உண்மை என்று அப்பாவிகள் சிலர் அப்படியே நம்பி வைத்திருக்கின்றனர்.
உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அரசியல் அடாவடிகள் காரணமாகவே இவர்கள் மு. காவில் இருந்து வெளியேறி செல்ல நேர்ந்தது. இவரின் அடாவடிகள் எல்லை தாண்டிய காரணத்தாலேயே சுய கௌரவம் காரணமாக இருவரும் வெளியில் போனார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளேயும், வெளியேயும் அவருக்கு மேலாக எவரும் தலை தூக்க கூடாது என்பதில் ரவூப் ஹக்கீம் அவதானமாக உள்ளார். ஏனென்றால் அது அவரின் தலைவர் பதவிக்கு ஆபத்தாகி விடும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கின்றார். குறிப்பாக கிழக்கு மண்ணின் மைந்தர்கள் என்றால் இவருக்கு இவ்விடயம் காரணமாக இவருக்கு இயல்பாகவே அலர்ஜியும், அச்சமும் இருந்து வருகின்றன. ஆகவேதான் இலாவகமான முறையில் காலத்துக்கு காலம் கிழக்கு மண்ணின் மைந்தர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றியும், வெளியேறவும் வைத்து உள்ளார். கடைசியாக இந்த அநியாயம் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோருக்கு நடந்தேறி உள்ளது.
தேசிய அரங்கிலும் சரி, முஸ்லிம் அரசியலிலும் சரி முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் விளங்குகின்றனர். குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஹசன் அலி கொத்து கொத்தாக பெற்று கொடுத்தார். அதே நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸவுக்கே ஆரம்பத்தில் ஆதரவை வெளிப்படுத்தி தபால் வாக்குகள் வழங்கப்பட்டு சில நாட்களில் ரவூப் ஹக்கீம் குத்துக்கரணம் அடித்தார். ஹசன் அலியின் நெருக்குதல், அழுத்தம் ஆகியன காரணமாகவே ரவூப் ஹக்கீம் இவ்விதம் மாற வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தின் பார்வை ஹசன் அலியின் மீது விழுந்ததில் எந்த வியப்பும் கிடையாது. ரவூப் ஹக்கீமை காட்டிலும் ஹசன் அலிக்கு நல்லாட்சி அரசாங்கம் மேலான இடத்தையும், முக்கியத்துவத்தையும் வழங்கியது. குறிப்பாக ரவூப் ஹக்கீமை விடுத்து ஹசன் அலிக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி வழங்க தீர்மானித்தது. ஆனால் இந்த இடத்தில் நான் சுட்டி காட்ட விரும்புகின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை ஒரு பொருட்டாககூட மதிக்காமல் ஹசன் அலி விட்டு கொடுத்தார். அதன் பின்தான் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிடைக்க ஹசன் அலிக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு இருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சு பதவி வழங்க நல்லாட்சி அரசாங்கம் முடிவெடுத்தது.
பாராளுமன்ற தேர்தல் வந்தது. அத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஹசன் அலி உறுதியுடன் காணப்பட்டார். ஆனால் இவரை போட்டியிட வைக்க கூடாது என்பதில் ஹக்கீம் பற்றுறுதியுடன் காணப்பட்டார். இவரை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து தடை செய்தார். அதற்காக தேசிய பட்டியல் நியமனம் தருவார் என்று இல்லாத பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி கழுத்தறுத்தார். பஷீர் சேகு தாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட தயாரானார். இவர் ஏற்கனவே அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரையும் வேட்பாளராக போட்டியிட வைக்க கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக ஹக்கீம் செயற்பட்டார். தேசிய பட்டியல் வழங்குவதாக வலிந்து சொல்லி இவரையும் வேட்பாளராக போட்டியிட விடாமல் தடை செய்தார்.
அவரை தவிர எவரும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக இருக்க கூடாது, குறிப்பாக கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்க கூடாது என்பதில் காலம் காலமாக அவதானத்துடன் நடந்து வருபவர் ஹக்கீம். எனவே இருவரையும் வெட்டினார். இருவரும் தேசிய பட்டியல் கேட்டு சண்டை பிடிக்கின்றனர் என்று தேர்தல் முடிந்த கையோடு நடந்தவைகளை மறைத்து நாடகம் நடத்தினார். ஆகவேதான் ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுங்கினார்கள்.
0 comments :
Post a Comment