இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் வெளியேற வலியுறுத்தி, மஹிந்த அணி கடிதம்
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து, இலங்கை உடன் வெளியேற வேண்டும் என, மஹிந்த தரப்பினரால் கடிதம் ஒன்று எழுதப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து, மஹிந்த ஆதரவு அணியினர், நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களுக்கும் இன்றைய தினம் தெளிவுபடுத்தியுள்ளார்.
குறித்த கடிதத்தின் மூலம், தமது தரப்பு, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஒருபோதும் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக்கூடாது என, என்பதை வலியுறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இலங்கையே ஆதரவு வழங்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான பிரேரணைகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் இலங்கை இராணுவத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய பிரேரணையே தற்போது ஐக்கிய நாடுகளில் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணை இலங்கை நாடாளுமன்றையும், இறைமையையும் பலவீனப்படுத்தும் தன்மை கொண்டது. இத்தகைய பிரேரணையை ஆதரித்த இலங்கை அரசாங்கம், தனது தீர்மானத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.
எனவே இது குறித்து ஜனாதிபதி மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என, குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment