மஹிந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, மீளப்பெறப்பட்டது - நீதிமன்றம்
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால், இலங்கை முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதனை அடுத்து ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ மற்றும் 48 பேர் உள்ளடங்கலான அமைச்சரவை உறுப்பினர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என அறிவித்து, அவர்களை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, இந்த மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்றைய தினம் மனுதாரர்களால், குறித்த மனு மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிபதி அர்ஜூன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரியிருந்த விடயங்கள் தற்போது நிறைவேறியுள்ளதால், மனுவைத் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மஹந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப்பெறப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment