Thursday, March 14, 2019

பாதீட்டின் இரண்டாம் நாள் குழு நிலை விவாதம் இன்று

இன்று காலை 9.30 மணி அளவில் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாள் நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று முக்கியமாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார். காலை 9.30 மணியளவில் சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளதுடன், காலை 10 மணியளவில் விவாதங்கள் தொடங்கும் என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி, பிரதமரின் செயலகம், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் அரச சேவைகள், நீதிச்சேவை, பொலிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

எவ்வாறான போதிலும் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளைத் தோற்கடிப்பதாக, ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீப காலமாக கருத்து வெளியிட்டு வந்தநிலையில், அவர்கள் வாக்கெடுப்பொன்றையும் கேட்டிருந்தார்கள். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினார்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்கெடுப்பை கோரிய நிலையில், அமைச்சரும் சபை முதல்வருமான லக்மன் கிரியெல்ல மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாக்கெடுப்பை நிராகரித்தார்கள்.

இந்த நிலையிலேயே ஆட்சேபனை மாத்திரம் பதிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment