Saturday, March 9, 2019

சில அரச நிறுவனங்கள் இனி அமைச்சுகளுக்கு கீழே இயங்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் சில அரச நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்த வகையில் இதுவரையில் எந்தவித அமைச்சுக்கும் உட்படுத்தப்படாத நிறுவனங்களே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில், இதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை தகவல் தொடர்பான ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழும், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நிதி அமைச்சின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் யாவும் தகவல் தொலைத் தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதற்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ரன்மினிதென்ன மஹிந்த ராஜபக்ஸ சினிமா கிராமம், புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment