Tuesday, March 12, 2019

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது

இந்த ஆண்டுக்கான பாதீட்டின், இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில், இந்த ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிராகவும் வாக்களித்திருந்தன.

இலங்கையின் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது பாதீடு, நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள், கடந்த தினங்களில் ஆரம்பமாகி காரசாரமாக இன்று வரை நடைபெற்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாதீட்டுக்கான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, நாளை முதல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையிலான 19 நாட்கள், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதங்களின் நிறைவில், ஏப்ரல் ஐந்தாம் திகதி மாலை பாதீட்டுக்கான இறுதி நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments:

Post a Comment