Sunday, March 24, 2019

அரச உத்தியோகித்தர்களை காட்டிக்கொடுக்கும் றிசார்ட் பதுயுதீன். கூசா தூக்கியதற்கு பிரதியுபகாரம்.

வில்பத்து காடுகளை அழித்து சொத்து சேர்த்ததாக றிசார்ட் பதுயுதீன் சிக்கலில் சிக்கியுள்ளார். இயற்கை வளங்களை காப்போம் என்ற அமைப்பு றிசார்ட்டுக்கு எதிராக ஊழல்கள் மோசடிப் பிரிவில் முறையிட்டுள்ளனர்.

1990 ம் ஆண்டு வன்னியிலிருந்து சொப்பின் பையுடன் புத்தளம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த ரிசார்ட் பதுயுதீன் தற்போது இலங்கையில் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார் என்றும் இச்சொத்துக்கள் அவருக்கு எவ்வாறு வந்தது என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றில் உரையாற்றிய ரிசார்ட் பதுயுதீன், தான் எவ்வித காடழிப்பிலும் ஈடுபடவில்லை என்றும் அன்றைய அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றின் சிபாரிசின் பெயரில் அப்பிரதேசத்திற்குரிய பிரதேச செயலரே காடுகளை அழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

றிசார்ட் பதுயுதீன் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே காணப்படும் மோசடிப்பேர்வழிகளான அரச உத்தியோகித்தர்களை தனக்கு தேவையான இடங்களுக்கு நியமித்து அவர்கள் ஊடாகவே தனது தேவைகளை நிறைவேற்றி பழக்கப்பட்டவர். அவ்வாறு றிசார்ட்டின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகள் பலர் றிசார்டினால் மிரட்டப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகியிருந்ததை இங்கு யாவரும் நினைவு கூர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறான நிலையில் றிசார்ட்டுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகும் ஏதுநிலைதோன்றும்போது, எந்த அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைத்து காரியங்களை முடித்துக்கொண்டாரோ அதே அதிகாரிகளை பலியிட நினைப்பது தர்மத்திற்கு மாறானதாகும். ஆனாலும், தமது சுயநலன்களுக்காக எள் என்றால் றிசார்ட் உட்பட்ட அரசியல்வாதிகளுக்கு எண்ணையை கொடுத்து பழகிய அரச உத்தியோகித்தர்கள் தண்டிக்கப்படுவார்களானால் இலங்கைநெட் அதனை வரவேற்கும்.

மாறாக தமது தொழிலை காத்துக்கொள்ளும் பொருட்டு றிசார்ட்டின் அரசியல் மற்றும் அடியாட்களின் பலத்திற்கு பயந்து கருமமாற்றிய உத்தியோகித்தர்கள் பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். காரணம் ரிசார்ட்டின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு தயக்கம் காட்டிய பல உத்தியோகித்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டும் தொழிலிருந்து நீக்கப்பட்டும் உள்ளனர் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

காரியங்களை சாதித்துவிட்டு அவர்கள் பலியிடப்படுவது நிறுத்தப்படவேண்டுமாயின், ரிசார்ட்டின் குறித்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக அரச உத்தியோகித்தர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் எவ்வாறு நிர்பந்திக்கப்பட்டார்கள் மிரட்டப்பட்டார்கள் என்ற உண்மைகளை குறித்த உத்தியோகித்தர்கள் காலக்கிரமத்துடன் வெளிப்படுத்தி ரிசார்ட்டுக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டுக்கு செய்கின்ற உபகாரமாகவும் தங்களை காக்கும் உபாயமாகவும் அமையும்.

அதேநேரம் றிசார்ட்டின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு துணை சென்று பதவியுயர்களையும் வரபிரசாதங்களையும் பெற்றுக்கொண்ட அரச உத்தியோகித்தர்கள் தொடர்பான தகவல்களையும் அவர்களுடைய செயற்பாடுகளையும் இலங்கைநெட் அம்பலப்படுத்த காத்திருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com