Saturday, March 16, 2019

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய குற்றத்திற்காக பறிபோனது தலைவர் பதவி

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் பதவி நீக்கம் தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமில தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய எம்.கே. அமில, தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன் சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். மேலும், எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான மாற்றீடு தொடர்பில் பரிந்துரைக்குமாறும் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் மித்தெனிய பகுதியிலுள்ள காவலரணில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவரால் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment