ஐ நாவின் கவனத்தை ஈர்த்திருக்குமா யாழ் ஆர்ப்பாட்டம் ?
யாழ்ப்பாணத்தில் இன்று ஐ நாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மாலை நிறைவடைந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் காலை 10 மணிக்கு இந்த மக்கள் எழுச்சி பேரணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மக்கள் எழுச்சி பேரணி, போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் முன்னெடுக்கப்பட்டது.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த எழுச்சிப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில், இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது, சிறைகளில் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை பேரணியில் முழங்கின. சர்வதேசத்திற்கு வலியுறுத்தலை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியவாறு பேரணியை முன்னெடுத்தார்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது.
இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என கோசம் எழுப்பியவாறு, மக்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment