சம்பிக்க மற்றும் வஜிரவுக்கு ஆப்பு. நிதி ஒதுக்கீடு தோற்கடிப்பு. மாவை மற்றும் செல்வம் ஆதரவாக வாக்கு. அரசை சாடுகிறார் சம்பிக்க
அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன. இவ்வாறு நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையானது அரசாங்கத்தின் கவலையீனம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு போதுமான பெரும்பாண்மை இருந்தபோதும் இரு அமைச்சுக்களுக்கான நீதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டதன் பின்னணி என்ன என தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அரசினை சாடியுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த விவாதத்தின் முடிவில், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த ரஞ்சித் சொய்சா கோரினார். இதையடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய மாலை 7.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் 15 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக, 23 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் 14 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், செல்வம் அடைக்கலநாதனும் மாத்திரம் வாக்கெடுப்பின் போது சபையில் இருந்தனர். அவர்கள் இருவரும் அரச தரப்புடன் இணைந்து நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் கருத்துரைத்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாவிட்டாலும் அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டதென தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று சபையில் கருத்து வெளியிட்ட பிரதமர்,
' ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்காததன்காரணமாகவே அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , வஜிர அபேவர்த்தன ஆகியோரின் அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்ட குழு நிலை ஒதுக்கீடு சபையில் தோல்வி அடைந்தது.
இந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதை பெரிய பிரச்சினையாக கருதவேண்டியதில்லை.' என்றார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட சபை முதல்வரான கிரியல்ல,
' உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுக்கும், பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ' என்றார்.
1 comments :
Nice answer back in return of this difficulty with genuine
arguments and describing all on the topic of that.
Post a Comment