தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பின்னால் ஓடக்கூடாது - யாழில் பிமல் ரத்னாயக்க
தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் ஒரு கட்சி என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக்கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார் என்றும், யாழில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்குஆதரவு அளிக்கப்போவதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்து வினவியபோது பிமல் ரத்னாயக்க மேற்படி தெரிவித்தார். கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பு விவாதம் நடைபெற்றபோது, மக்கள் விடுதலை முன்னணி சார்பாக கலந்து கொண்டிருந்த நான் நேர்மையாக செயட்பட்டேன்.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். நாட்டின் சமத்துவத்தைப் பேணும், மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் என்ற நிலையிலேயே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவோ இனவாத ரீதியாக தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். மறுபுறத்தில், ரணில் விக்ரமசிங்க கரட்டைக் காட்டி, தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கவனித்துக்கொண்டார்.
எனவே, நாட்டின் புதிய அரசியலமைப்பு ஒன்று வரக்கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டிருக்கின்றார். அந்த நிலையைத்தான் தற்போதும் பிரதமர் கைக்கொண்டு வருகின்றார். எனவே இதில் இருந்து அறிவது யாதெனில், இனியும் புதிய அரசியலமைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே.
இன்றும்கூட அரசியல் சாசனம் பற்றிப் பேசப்படுவதும் இல்லை, அரசியல் சபை கூடுவதும் இல்லை. அதற்கான எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்காத நிலை இருக்கின்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் எந்த அடிப்படையில் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிக்கின்றீர்கள்? என்றுதான்.
அதனால், நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்கும் தயார். ஆனால், ரணில் விக்ரமசிங்கவை நிராகரித்துவிட்டு, மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுகிறோம். முக்கியமாக, ஒரு சில தேசிய பிரச்சினைகளை தீர்க்கின்ற செயற்பாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நல்ல முன்மொழிவுகளை வைத்திருக்கின்றார். அவற்றை, பிரதமர் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
அண்மைய நாட்களில் நாட்டில் சதி ஏற்பட்ட போது, அதை முறியடிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல அமைப்புக்கள் இவற்றிற்கு எதிராக செயற்பட்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித் திட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், முன்னையவை போன்று ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கும், ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள். அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளை அணிதிரட்டிய புதிய பாதையில் அணிதிரள்வதற்கான காலம் உருவாகியுள்ளது என்று நாங்கள் கூறுகின்றோம்,.
எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பின்னால் ஓடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment