Thursday, March 14, 2019

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நீதிமன்றத்தின் மூலம், பிணைமுறிக்கான தீர்வு வழங்கப்படும் - தலதா

புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் ஊடாக, பிணைமுறி விவகாரம் குறித்த தீர்வு வழங்கப்படும். அத்துடன் நாட்டிலுள்ள பாரிய பிரச்சனைகளுக்கான சிறந்த தீர்வு காணப்படும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும், ஊழல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஏற்கனவே விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த வழக்குகளுக்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனை கூறினார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட நீதிமன்றத்தின் ஊடாக, நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு காணப்பட வேண்டும். அது பிணைமுறியோ அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்.

நாட்டிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட பணிகளை மேற்படி விசாரணைகளை செய்யும் நிறுவனங்கள், நீதிமன்ற ஆணைக்குழு, ஊழல் ஆணைக்குழு என்பன முன்னெடுக்கும்.

இதனிடையே பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளுக்காக வெளிநாட்டிலிருக்கும் சந்தேக நபரை ஒருபோதும் என்னால் இலங்கைக்கு கொண்டு வர முடியாது. அது தொடர்பாக விசாரணை செய்யும் குழுவினரே, தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment