Friday, March 1, 2019

இந்திய விமானி விடுவிக்கப்பட்டு இந்தியா சென்றடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கொமாண்டர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லையான வாகா வுக்கு அவரை அழைத்துவந்த இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் கைதிகள் பாரமளிப்பு விதிகளை பின்பற்றி ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திட்டுக்கொண்டனர்.

அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானன் இந்தியாவுக்கு இன்று திரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ ஜெட் மிக்-21 விமானத்தின் விமானியான அபிநந்தன் பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் வான்வெளி விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது யாவரும் அறிந்தது.

கைதுக்குப் பிறகு அவர் பன்னாட்டுச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க மரியாதையாக நடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அவரை விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயர்ந்து நிற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை அடைந்த விங்கொமாண்டர் ஊடகங்களுக்கு 'திரும்பியதில் மகிழ்ச்சி' என்ற ஒற்றை வசனத்தை மாத்திரம் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானில் இருந்தபோது வீடியோ பதிவு ஒன்றினூடாக மக்களுக்கு செய்தி சொன்ன விங் கொமாண்டர் „பாக்கிஸ்தான் இராணுவத்தினர் தன்னை கௌரவமாக நடாத்தினர் என்றும் இதையே தனது இராணுவமும் செய்யவேண்டும் எனக் வேண்டிய அவர் இந்தியாவிற்கு சென்ற பின்னரும் இதையே தான் கூறுவேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அபிநந்தனை வரவேற்றார். அவர் முறையான வழக்கப்படி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com