மதம் சார் சுதந்திரத்திற்கு, அதிக முன்னுரிமை வழங்கப்படும் - கோட்டாபய ராஜபக்ச
இலங்கையர்களின் மதம் சார்ந்த சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற எளிய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்து இடம்பெறும் தேர்தலில் பின்னர், எமது தரப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள். அதன் பின்னர் அனைவருக்கும் மத ரீதியிலான சுதந்திரம் அதிகமாக வழங்கப்படும்.
நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள், எம்மைப் பார்த்து இனவாதிகள் என்று அழைக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இனவாதிகள் அல்ல. எந்த இனம் அல்லது மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தாய்நாட்டை நேசிப்பவர்களாக இருப்பதே முக்கியமானது.
எமது ஆட்சிக் காலத்தின் போது, இலங்கையர்களின் தனித்துவமான கௌரவத்திற்கு மரியாதை செலுத்தி, சகலருக்கும் சம உரிமையை வழங்குவதே, எமது இலக்கு என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்த செயல்பாடுகளும், பொது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டே அமைந்தன. எனினும் எமக்கெதிராக பொய்ப்பிரசாரங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், தற்போது இலங்கையர்களுக்கு, உண்மையான அரசியல் தலைவர்கள் யார் என்பது புரிந்திருக்கும் என, அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இலங்கையின் யுத்த சூழலில், ஒருபோதும் எமது தரப்பினர் வெள்ளை வான் கலாசாரத்தில் ஈடுபடவில்லை என, கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் வென்று மக்களை பாதுகாப்பதற்காக, சில நுண்ணறிவு செயற்பாடுகளை மாத்திரமே நாங்கள் மேற்கொண்டோம். அதனை விடுத்தது மக்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான எந்தவித செயல்பாடுகளையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை என அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்றிருந்த யுத்தத்தை வெற்றி கொண்டு, அனைத்து மக்களுக்கும் நிம்மதியான வாழ்க்கையை கொண்டு செல்வதைக்கான ஏற்பாடுகளை செய்தார். இதனை எவரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். .
0 comments :
Post a Comment