அர்ஜூன மகேந்திரன் விடயத்தில் சிங்கப்பூர் நேர்மையாக செயற்படவில்லை. சாடுகின்றார் மைத்திரி
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக வகைகூற வேண்டிய முக்கிய நபரை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது சம்பந்தமாக நான் சிங்கப்பூரின் பிரத மந்திரியிடம் பிரத்தியேகமாக பேசியபோதும், இதுவரை அவர்கள் எமது வேண்டுதலுக்கு செவிசாய்ததாக தெரியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சாடியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
2015 ஜனவரி 08ஆம் திகதி 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தாம் அதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத பல்வேறு தீர்மானங்கள் அடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளையான மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கண்டறிவதற்கு தான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது ஆணைக்குழுக்கள் பற்றி அதுவரையில் மக்கள் மத்தியில் இருந்து வந்த நம்பிக்கையீனம் மற்றும் பின்னடைவான கருத்துக்களை மாற்றியமைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த விசாரணையை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிலவேளைகளில் அவர்களுக்கெதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அதனை அரச நிர்வாகத்தில் இடம்பெற்ற பலவீனமான நிகழ்வாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
நல்லாட்சி எண்ணக்கருவினுள் ஒரு நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்குள்ள முக்கிய சவாலாக ஊழல், மோசடிகள் இருக்குமானால் அதனை ஒழிப்பதற்கு நாட்டை நேசிக்கின்ற அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பாதுகாப்பதன்றி நாட்டின் உண்மையான நிலைமை பற்றிப் பேசி அவற்றிற்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு எவரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அத்தகைய நிலைமையில் எவரும் இதுபற்றி வெளிப்படையாக பேசுவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு தெளிவான நிகழ்ச்சித்திட்டமொன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சிறந்த அரச சேவையின் மூலம் இலஞ்ச, ஊழல் இல்லாத சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகளுக்கு எதிராக தண்டனை வழங்குதல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டம் இதன்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இலஞ்ச, ஊழலை இல்லாதொழித்து அதன் மூலம் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றாடல் ரீதியான பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவது இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும். சுமார் ஒரு வருட காலமாக இலஞ்ச, ஊழல் சட்டத்தில் இலஞ்ச, ஊழலுக்கான தண்டனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறு பலவீனமான சட்டதிட்டங்களுடன் தொடர்பான விடயங்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் திருத்தப்பட்டு அதற்கேற்ப இந்த புதிய திட்டங்கள் அடங்கிய ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து நிறுவனக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழித்தல், தண்டனை முறைமைகள் மற்றும் சட்ட கொள்கைகளை திருத்துதல் ஆகிய முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சுமார் 40 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொள்வதற்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மூன்று நிக்காயாக்களின் சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சகல மத தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட சட்டத்துறை முக்கியஸ்தர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பீ டெப்லிட்டி, ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment