Thursday, March 14, 2019

ஐ நாவின் சுற்றாடல் மாநாட்டில் இன்று ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பை ஏற்று சென்றுள்ள ஜனாதிபதி, இன்று ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார். நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார். கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு, நாளை வரை நடைபெறும்.

இந்த அமர்வு சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வருகின்றன. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

இதனிடையே, 1970ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் கென்யாவிற்குமான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை பேணப்பட்டு வருகின்றன.

எவ்வாறான போதிலும் பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA) ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகித்து வருகின்றன. கென்யா இலங்கையின் விசேட வர்த்தக பங்காளராக காணப்படாவிடினும், பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை காணப்படாத பொருளாதார தொடர்புகள் தொடர்பில் இரு நாடுகளும் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றன.

அவற்றில் ஆடை உற்பத்தி, நீர் மின் உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மோட்டார் வாகன பயிற்சி துறைகளில் தற்போது இலங்கையர்கள் கென்யாவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment