Sunday, March 3, 2019

ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டுமா? - அமைச்சர்கள் கபீர் ஹாஷிம் , ரவூப் ஹக்கீம் கருத்து

யுத்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவாகவே செயற்பட்ட போதிலும், நடப்பு நாட்களில் ஜனாதிபதி முறைமை குறித்து பொருத்தமான ஒரு தீர்மானத்தை தமது கட்சி எடுக்கும் என அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தநிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் நாட்டுக்கு முக்கியமான காலப்பகுதியில் அதனை நீக்கவேண்டும் என்று கூறியவர்கள், இப்போது அந்த அந்த அவசியம் இல்லாதபோது நிறைவேற்ற ஜனாதிபதி முறைமை வேண்டும் என்கிறார்கள்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி முறைமை குறித்து பொருத்தமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையேயே தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று, உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கிறார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தச்சட்டம் குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அப்படி பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்கள் மூலமாக தீர்வுகள் குறித்து திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு நாம் நிறைவான உடன்பாட்டை வழங்குவோம். மாறாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இது சரியான நேரம் இல்லை.

தற்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக மட்டுமே கையாளப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுவரும் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பது பொருத்தமானது இல்லை.

ஆகவே, முதலில் அதிகார பகிர்வு முக்கியம். அதன் ஊடாக அரசியல் முரண்பாடுகளுக்கு தீர்வை அடைய நினைத்தால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றோம் என்றுஅமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

No comments:

Post a Comment