Saturday, March 23, 2019

ஆக்கிரமிப்புகாரர்களான பிரித்தானியர் எமது பெண்களை கற்பழித்தனர். ஐ.நா வில் போட்டுடைத்தார் சரத் வீரசேகர.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுகளில் கலந்து கொண்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று சார்பாக கருத்துரைத்த ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பிரித்தானியர் 7 வீத சிங்கள சனத்தொகையை கொன்றொழித்து இலங்கை பெண்களை கற்பழித்தாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் :

பிரித்தானியா கொண்டுவந்துள்ள இலங்கைக்கெதிரான தீர்மானத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிசாந்த த சில்வா தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர் இடமாற்றம் செய்யப்பட்டது ஒரு கொலைக்குற்றத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதற்காகவே.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட எமது படையினரை போர்க்குற்றவாளிகள் எனும் பிரித்தானியா மறுபுறத்தில் பயங்கரவாத இயக்கத்திற்காக பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் கழுத்துகளில் சயனைட் வில்லைகளை தொங்கவிட்ட அடல் பாலசிங்த்தினை காப்பாற்றி வருகின்றார்கள். இதிலிருந்து பிரித்தானியாவின் இரட்டை முகம் வெளிப்படுகின்றது.

பிரித்தானியாவிற்கு எமது நாடு தொடர்பாக பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்கள் எங்களை ஆக்கிரமித்து எமது சுதந்திரத்திற்காக போராடிய எங்கள் மூதாதையர்கள் ஈன இரக்கமின்றி கொன்றொழித்தவர்கள். 1818 இல் றொபர்ட் பிறவுன் தலைமையில் எமது இளைஞர்களை கொன்றொழித்துடன் சிங்கள யுவதிகளை கற்பழித்து அவர்களின் வாழ்வினை அழித்தொழித்தார்கள்.

இலங்கையில் 7 விகிதமான சிங்கள மக்கள் பிரித்தானியரால் கொன்றொழிக்கப்பட்டதாக டொக்டர் ஜோன் டேவிட் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் தூக்கிலிடப்படுவதை காலை உணவை உண்டுகொண்டு ரசித்ததாக இழிபுகழ் பெற்றவர்தான் லெப்டினன் மக்ரைன்.

எனவே பிரித்தானியா எமக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக கற்றுக்கொடுப்பதற்கு முன்னர் எங்கள் மீது மேற்கொண்ட அட்டூழியங்களுக்காக பகிரங்க மன்னிப்புகோருவதுடன் எம்மிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற பெறுமதிப்பு மிக்க சொத்துக்களை மீளளிக்கவேண்டும்.

பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை எமது தலைவர்கள் ஆமோதிக்கலாம் ஆனால் நிச்சமாக நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com