Friday, March 1, 2019

பிரியங்க பெர்னாண்டோ குறித்த தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்த செயலானது, இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை செல்லுபடியாகாது என இன்று மன்றில் வைத்து அறிவித்தார்.

‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு, இராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கையின் 70ஆவது சுதந்திரத் தினம், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்பட்டன. இதன்போது புலம்பெயர் தமிழர்கள் அங்கு கூடி கண்டனப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கம் பிரிகேடியர் பிரியங்கவை மீள நாட்டுக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment